"ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு 4 முறை போனீங்கள்.." கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! காட்டமாக நீதிபதி தந்த பதில்
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி மாஜி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, இந்த வழக்கிலிருந்து விலக வேண்டும் எனச் சில தினங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வழக்கில் இன்று சில முக்கிய உத்தரவுகள் வந்துள்ளன.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இருந்தபோது 2021- 2022ல் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை மாற்றப்பட்டது. புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு வெளியிட்டது. இருப்பினும், அந்த கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுபான கொள்கை வழக்கு
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோற்க இதுவே பிரதான காரணமாக இருந்தது. இருப்பினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதில் எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை எனச் சொல்லி அனைவரையும் விடுவித்தது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறார். இருப்பினும், அவர் விசாரிக்கக் கூடாது எனச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். வேறு நீதிபதியிடம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தார். இதற்கிடையே கெஜ்ரிவால் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் கெஜ்ரிவால் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த அந்தத் தீர்ப்பில், நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா சில காட்டமான கருத்துகளையும் கூறியுள்ளார்.
ஏற்க மறுப்பு
கெஜ்ரிவால் முன்வைத்த 'சார்புத் தன்மை' புகார்களை முற்றிலுமாக நிராகரித்த நீதிபதி, "நீதிமன்றம் எந்த அழுத்தத்திற்கும் பணியாது" என்பதைத் தெளிவாக விளக்கினார். அவர் மேலும், "மனுதாரர் (கெஜ்ரிவால்) இப்போது நீதித்துறையையே கூண்டில் ஏற்றி விசாரணை நடத்துகிறார். இது தவறான முன்னுதாரணம். ஒரு நீதிபதி ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்று சொன்னால், அதை மனுதாரர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வெறும் சந்தேகத்தை வைத்து நீதிபதியை மாற்றச் சொல்ல முடியாது" என்றார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய அமைப்புகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, "புதிய சட்டங்கள் மற்றும் மகளிர் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ஒரு நீதிபதியின் கடமை. இதை அரசியல் சித்தாந்தத்தோடு முடிச்சுப் போடுவது அபத்தம்" எனச் சாடினார்.
காட்டம்
நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசின் வக்கீல் குழுவில் இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்கு, "ஒரு அரசியல்வாதியின் மனைவி அரசியல்வாதியாகலாம், பிள்ளைகள் அரசியலுக்கு வரலாம்... அப்படி இருக்கும்போது ஒரு நீதிபதியின் பிள்ளைகள் சட்டம் பயிலக்கூடாதா? அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்" காட்டமான கருத்துகளைக் கூறினார்.
அவர் மேலும், "இந்த வழக்கிலிருந்து விலகுவது எனக்கு மிக எளிதான விஷயம். அமைதியாக வெளியேறிவிடலாம். ஆனால், அப்படி விலகினால் நான் என் கடமையிலிருந்து தவறியவள் ஆகிவிடுவேன். இது சரணடைவதற்குச் சமம். நான் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளேன். பயமின்றி நீதியை நிலைநாட்டுவேன்" என உறுதிப்படத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி
முன்னதாக வழக்கின் விசாரணையின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மாவைப் பார்த்துச் சொன்ன ஒரு விஷயம், அப்போது நீதிமன்றத்தையே ஒரு நொடி ஸ்தம்பிக்க வைத்தது. அப்போது கெஜ்ரிவால், "ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புடைய அதிவக்தா பரிஷத் நடத்திய நிகழ்ச்சிகளில் நீங்கள் 4 முறை கலந்து கொண்டுள்ளீர்கள். அந்த அமைப்பின் சித்தாந்தத்தைத் தான் நாங்கள் அரசியலில் கடுமையாக எதிர்க்கிறோம். இதுவும் ஒரு அரசியல் ரீதியான வழக்கு. அப்படியிருக்கும் போது, நீங்கள் விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்குமா என்கிற அச்சம் என் மனதில் இருக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications