குடிநீரை வீணாக்கினால் ரூ. 2000 அபராதம்.. உடனே அமலுக்கு வருகிறது.. டெல்லி அரசு அதிரடி!
டெல்லி: டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை (மே 30) முதல் அமலுக்கு வருகிறது.
தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு, ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது யமுனை ஆற்றில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வருகிறது.

ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய குடிநீரை குறைத்து விட்டதே, டெல்லியில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
டெல்லியில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி அரசை குறிவைத்து டெல்லி மக்களுக்கு பாஜக தொல்லை கொடுக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பாஜக அரசு, டெல்லிக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தியுள்ளது. ஹரியானா அரசு மூலமாக பாஜக இந்த சதியில் ஈடுபட்டுள்ளது என டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என்று டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் அதிஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி, "டெல்லியில் கடுமையான வெப்ப அலையும், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது, ஏனெனில் ஹரியானா அரசு, டெல்லியின் பங்கு தண்ணீரை வெளியிடவில்லை. இந்தச் சூழ்நிலையில், தண்ணீரைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது." எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், ஆங்காங்கே குடிநீரை கார் கழுவுவதற்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தான், கார் - பைக் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல், கட்டுமானங்களுக்கு குடிநீரை பயன்படுத்துவது போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீரை வீணாக்குவோருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்க டெல்லி குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீரை வீணாக்குவதைக் கண்காணிக்க டெல்லி முழுவதும் 200 குழுக்களை குடிநீர் வாரியம் நியமிக்க உள்ளது. கட்டுமானத் தளங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் ஏதேனும் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் இருந்தால் அவற்றைத் துண்டிக்கவும் ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க ஆம் ஆத்மி அரசு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த அபராதம் விதிக்கும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (மே 30) முதல் டெல்லியில் குடிநீரை வீணாக்குபவர்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications