விடுதியில் பிணமாக தொங்கிய சென்னை மாணவி.. டெல்லி சட்ட பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? திடுக் தகவல்
டெல்லி: டெல்லி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சென்னை மாணவி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பெயர் சங்கீதா. இந்த தம்பதியின் ஒரே மகள் அமிர்தவர்ஷினி. இவர் 12ம் வகுப்பை முடித்தபிறகு டெல்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு படிக்க சென்றார்.

தற்போது அமிர்தவர்ஷினி டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஏ. எல்.எல்.பி 3-ம் ஆண்டு படிப்பை படித்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி படிப்பை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் தான் விடுதி அறையில் அமிர்தவர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்தவவுடுன் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக டெல்லி துவாரகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி அறிந்தவுடன் மாணவி அமிர்தவர்ஷினியின் பெற்றோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். விடுதி சார்பில் மாணவி அமிர்தவர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் பெற்றோர் நம்ப மறுக்கின்றனர். தங்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்பவள் இல்லை என அவர்கள் கண் கலங்கி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் அமிதர்வர்ஷினியின் தற்கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தற்கொலை செய்த அமிர்தவர்ஷினி, கடந்த ஆண்டு சக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சமீபத்தில் அவர் மனஅழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினியின் தற்கொலை செய்து இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் என்பது கடந்த புதன்கிழமை நடந்தது. புதன் கிழமை அந்த மாணவி கல்லூரி செல்லவில்லை. விடுதியில் மதிய உணவும் சாப்பிடவில்லை. இந்த வேளையில் மாணவியின் கதவை பிற மாணவிகள் தட்டிப்பார்த்தனர். ஆனால் மாணவி கதவை திறக்கவில்லை. அப்போது தான் மாணவி தற்கொலை செய்தது தெரியவந்தது. அலமாரிக்கான இரும்பு கம்பியில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் யாரையும் குற்றம்சாட்டவில்லை.
முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக மனஅழுத்தத்தில் இருந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை பற்றி முன்கூட்டியே தோழிகளிடம் பேசியுள்ளார். இதனால் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேசி உள்ளது. அதன்பிறகு அவரை பெற்றோர் சென்னை அழைத்து சென்றனர். அதன்பிறகு திரும்பி வந்தவர் தற்கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‛‛எங்கள் மகள் அமிர்தவர்ஷினி 10ம் வகுப்பில் 500க்கு 472 மதிப்பெண் எடுத்தார். பிளஸ் 2வில் 600க்கு 447 மதிப்பெண் எடுத்தார். டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்ததால் இங்கு படிக்க வந்தார். எங்கள் மகள் தற்கொலை செய்துள்ளதை நம்ப முடியவில்லை. எங்களது மகளின் இறுதி சடங்குகளை செய்வதற்காக அவரது உடலை காசிக்கு எடுத்து செல்ல உள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications