ஆம்ஆத்மிக்கு அடுத்த அடி! டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சஞ்சய் சிங் எம்பி கைது! அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதில் ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. இருப்பினும் விசாரணை என்பது தொடர்ந்து வந்தது. அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம்ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது. இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதையும் சிபிஐ கண்டுபிடித்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் என்ட்ரி கொடுத்தது. சிபிஐ, அமலாக்கத்துறை இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தியது.
இதற்கிடையே தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார். மேலும் இந்த வழக்கில் தொழிலதிபர்கள், மதுபான ஆலை உரிமையாளர்கள் இடைத்தரகர்கள் என பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை என்பது நடந்தது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாட்டை முடக்கும் வகையில் தலைவர்களை கைது செய்ய நோக்கத்தில் மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் சஞ்சய் சிங் வீட்டில் நடத்தப்படும் சோதனையில் ஒன்றும் கிடைக்காது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் தான் இன்று மாலையில் ஆம்ஆத்மி கட்சியின் எம்பியான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கு குறித்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்காத நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் வழக்கில் ஏற்கனவே சிக்கிய 2 பேர் அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இவர்கள் சில முக்கிய தகவல்களை அமலாக்கத்துறையிடம் கூறிய நிலையில் தான் இன்று சஞ்சய் சிங் எம்பி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications