"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!
டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி, பின் விடுவிக்கப்பட்ட டெல்லி மாஜி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். அதுவும் ஒரு நீதிபதிக்கு எதிராகவே 'நேரடி வாதத்தில்' இறங்கியுள்ளார். நீதிபதியைப் பார்த்து ஆர்எஸ்எஸ் நிகழ்வில் நீங்களே கலந்து கொண்டு இருக்கிறீர்கள் என ஜெக்ரிவால் சொன்னதும் நீதிமன்றமே ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
டெல்லி மதுபான வழக்கு தேசிய தலைநகரில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தையே கொண்டு வந்தது. 2021- 2022ல் மதுபான விற்பனை தொடர்பான டெல்லி அரசின் கொள்கையில் ஊழல் நடந்ததாகச் சொல்லி சிபிஐ அதிகாரிகள், அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்தனர். கைதும் செய்யப்பட்டனர். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோற்க இதுவே பிரதான காரணமாக இருந்தது.

டெல்லி மதுபான வழக்கு
இருப்பினும், விசாரணை முடிவில் அவர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கூறி அனைவரையும் விடுவித்தது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா என்பவர் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறார். இது தொடர்பான விசாரணையில், கெஜ்ரிவால் நேரில் ஆஜரானார். அவரே தனது வழக்கில் வாதங்களை முன்வைத்தார்.
ஆர்எஸ்எஸ் வழக்கு
அப்போது நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மாவை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன விஷயம் ஒரு நொடி நீதிமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. கெஜ்ரிவால் அப்போது, "ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புடைய அதிவக்தா பரிஷத் நடத்திய நிகழ்ச்சிகளில் நீங்கள் 4 முறை கலந்து கொண்டுள்ளீர்கள். அந்த அமைப்பின் சித்தாந்தத்தைத் தான் நாங்கள் அரசியலில் கடுமையாக எதிர்க்கிறோம். இதுவும் ஒரு அரசியல் ரீதியான வழக்கு. அப்படியிருக்கும் போது, நீங்கள் விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்குமா என்கிற அச்சம் என் மனதில் இருக்கிறது" என வெளிப்படையாக வாதத்தை முன்வைத்தார்.
அவசரம் ஏன்!
சிபிஐ-யை 'கூண்டுக்கிளி' என உச்ச நீதிமன்றம் சொன்னதைக் குறிப்பிட்ட ஜெக்ரிவால், "மத்திய அரசின் அரசியல் எதிரிகள் தொடர்பான வழக்குகள் மட்டும் அதிவேகமாக விசாரிக்கப்படுவது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார். தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை, சிபிஐ மேல்முறையீடு செய்தபோது, மிகக் குறுகிய காலத்திலேயே நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா தடை விதித்ததைச் சுட்டிக்காட்டினார் கெஜ்ரிவால்.
இது தொடர்பாக அவர், "விசாரணை நீதிமன்றம் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆய்வு செய்துதான் நான் தவறு செய்யவில்லை என தீர்ப்பு கொடுத்தது. ஆனால், இந்த நீதிமன்றம் மிகச் சுருக்கமான விசாரணையை நடத்திவிட்டு, அந்த உத்தரவை மாற்றியது. அதைப் பார்த்ததும் என் இதயம் வேதனைப்பட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
நீங்களே லாயர் ஆகலாம்!
கெஜ்ரிவாலின் வாதங்களைக் கூர்ந்து கவனித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, ஒரு கட்டத்தில் புன்னகையுடன், "நீங்கள் மிகச் சிறப்பாக வாதாடினீர்கள்... நீங்கள் ஒரு வழக்கறிஞராகவே ஆகிவிடலாம்!" எனப் பாராட்டினார். அதற்குத் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பதிலளித்த கெஜ்ரிவால், "நன்றி மேடம்... ஆனால் இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையிலேயே (அரசியல்) மகிழ்ச்சியாக இருக்கிறேன்!" என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீதிபதி விலக வேண்டும் என்கிற கெஜ்ரிவாலின் கோரிக்கை அடிப்படை ஆதாரமற்றது" எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications