Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டங்கள் விதிகளை மீறுபவர்கள் வசதிக்காக அல்ல.. ஜன விஷவாஸ் மசோதாவுக்கு வில்சன் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயிலில் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குடிபோதை, புகைப்பிடித்தல், பெண்களின் பெட்டிகளுக்குள் நுழைவது போன்ற குற்றங்களை அபராதம் செலுத்தி குற்றமற்றதாக மாற்றும் ஜன விஷவாஸ் மசோதாவுக்கு என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொது ஒழுங்கு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் ஆகியவை கடுமையான பின்விளைவுகள் இன்றி சமரசம் செய்யப்படலாம் என்பது மிகவும் கவலையளிக்கிறது என்றும் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிப்பதற்கு பதிலாக அபராதத்தை மட்டும் செலுத்தி, அந்த குற்றத்தை தண்டைக்குரிய குற்றமற்றதாக மாற்றும் வகையில் ஜன் விஷ்வாஸ் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 23 துறைகளால் நிர்வகிக்கப்படும் 79 மத்திய சட்டங்களின் வணிகம் தொடர்பான 717 மற்றும் மக்கள் வாழ்வு தொடர்பான 67 என 784 பிரிவுகள் தண்டனைக்குரிய குற்றமற்றதாக மாற்றும் இந்த மசோதாவை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அறிமுகம் செய்தார்.

DMK MP Wilson Opposes Jan Vishwas Bill The Judiciary s Authority Will Be Eroded

ஜன் விஷ்வாஸ் விதிமுறைகள்

இந்த மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்பி பி.வில்சன் பேசுகையில், "தீவிர குறைபாடுகளுடனும், பொறுப்பற்ற முறையிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஆபத்தான "ஜன் விஷ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதாவை" எதிர்க்கிறேன். இந்த மசோதா சீர்திருத்தத்தையோ, முற்போக்கான ஆளுகையையோ அளிக்காமல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு சிதைக்கும் வகையிலும், பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், பெருநிறுவனங்களின் வசதிக்காக சட்டத்தின் ஆட்சியை சரணடைய செய்யும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.நம்பிக்கை அடிப்படையிலான ஆளுகை என்று வணிக நோக்குடன், பணம் கொடுத்துத் தப்பிக்கும் முறையாகவும், சக்திவாய்ந்தவர்கள் சட்டத்தை மீறிவிட்டு பணத்தை கொடுத்துவிட்டுத் தப்பித்துச் செல்ல முடியும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதுவோரின் கனவு.. யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து திமுக எம்பி வில்சன் கேள்வி
மசோதா வாபஸ்

2025 ஆகஸ்ட் மாதம் 10 அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் 16 மத்தியச் சட்டங்களில் உள்ள 355 விதிகளைத் திருத்தும் நோக்கில், ஜன் விஷ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா, 2025-ஐ ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியபோது, தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதலாக 62 மத்தியச் சட்டங்களைக் குற்றமற்றதாக்க அக்குழு பரிந்துரைத்ததால், மசோதா வாபஸ் பெறப்பட்டது.

பெருநிறுவனங்களுக்கு உதவும்

ஆனால் பெருநிறுவன நண்பர்களுக்கு உதவும் நோக்கில், மேலும் விரிவான மற்றும் தாராளமயமான 'ஜன் விஷ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா 2026-ஐ ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவந்துள்ளது. புதிய மசோதா 80 மத்திய சட்டங்களைத் திருத்தவும், திகைக்கவைக்கும் வகையில் 717 குற்றங்களை குற்றமற்றதாக்கவும், 23 அமைச்சகங்களைச் சார்ந்த 784 விதிகளை மாற்றியமைக்கவும் முயல்கிறது. அந்த சட்டங்கள் குறித்த சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமலும், மாநிலங்களுடன் கலந்துரையாடாமலும், பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படாமலும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏன் இவ்வளவு அவசரம்? யாரை காப்பாற்ற ஒன்றிய அரசு விரும்புகிறது?

கடுமையான விதிமீறல்கள் குற்றமில்லையா

எந்தவொரு பகுத்தறிவு வகைப்பாடும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக குற்றமற்றதாக்குவதே இந்த மசோதாவில் உள்ள முதன்மையான மற்றும் வெளிப்படையான குறைபாடாகும். சிறுசிறு நடைமுறை தவறுகளுக்கும், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான மீறல்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவை அனைத்தும் தொழில்நுட்பம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. அனைவருக்கும் பொருந்தும் ஒரே அணுகுமுறையை சீர்திருத்தம் என சொல்ல முடியாது, பொறுப்பற்றத் தன்மையாகத்தான் இருக்கும்.

வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம்
வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம்

அழகுசாதன பொருட்கள்

1940 ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், தரமற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களை தயாரித்து அல்லது விற்பனை செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில், தற்போது அபராதம் மட்டும் செலுத்த வகை செய்கிறது. ஒரு நிறுவனம் நச்சுப் பொருட்களுடன் கூடிய தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும்போது, பெண்களுக்கு தீக்காயம் ஏற்படுகிறது, அதன் தொற்றால் குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள், கல்லீரல், சிறுநீரகம், மூளை ஆகியவை பாதிக்கப்படுகின்றன, வாழ்வின் நிரந்தர வடுக்களாக மாறுகின்றன. ஆனால் குற்றவாளிக்கு என்ன நடக்கும்? அபராதம் செலுத்திவிட்டு , தொடர்ந்து வியாபாரம் செய்து லாபம் ஈட்டுகிறார்கள்.

அபராதம் விதிப்பது சரியா

இதை ஒரு குற்றத்தை குற்றமற்றதாக்கும் நடவடிக்கை என்று மட்டும் கூறிவிட முடியாது, ஆனால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதைச் சட்டப்பூர்வமாக்குவதாக அமைகிறது. இதுபோன்றவற்றால், சாதாரண குடிமக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டுவரமுடியாத விளைவுகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் விதிகளை மீறுபவர்கள், வியாபாரம் செய்வதற்கான செலவாகவே அபராதத்தை கருதுகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு சட்டம்

உணவுப் பாதுகாப்புத் தர சட்டம் சமரசம் செய்யப்பட்டுள்ளது; மின்சாரத் திருட்டை தடுக்கும் மின்சாரச் சட்டத்தின் கடுமையான விதிகள் நீர்த்துப் போயுள்ளன, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உட்பட்ட குடியிருப்பை வழங்க மாட்டார்கள், மருத்துவ நிறுவனங்கள் சட்டம் அபராதத்துடன் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனை, நோயறிதல் தொடர்பான குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படாது, போலி முத்திரைதாள்களை சுலபமாக விற்க முடியும், இவற்றுக்கெல்லாம் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.

ரயிலில் குடிபோதை பயணம்

ரயில்வே கட்டமைப்பு உள்ளிட்ட போக்குவரத்துச் சட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளன. பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குடிபோதை மற்றும் ஒழுங்கற்ற நடத்தை, அத்துமீறி நுழைதல், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப்பிடித்தல், மற்றும் பெண்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்குள் நுழைவது போன்றவை அபராதங்களாகவோ அல்லது குறைக்கப்பட்ட தண்டனைகளாகவோ நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் ஆகியவை கடுமையான பின்விளைவுகள் இன்றி சமரசம் செய்யப்படலாம் என்பது மிகவும் கவலையளிக்கிறது.

காப்பிரைட் சிக்கல்

பாதுகாப்புப் பணிகள் சட்டமும் புதிய சட்டத்திருத்தத்தால் நீர்த்துப் போயுள்ளதால், பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டலாம், காப்பிரைட் எனப்படும் பதிப்புரிமையைத் திருடிவிட்டு அபராதத்துடன் தப்பித்துச் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுப் பாதுகாப்பும் சமரசம் செய்யப்படுகிறது.

ஐந்து ஆண்டு சிறை

நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பற்றதாகவோ அல்லது பயணிக்க முடியாததாகவோ இருந்தால் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகள், ஆம்புலன்ஸ்கள் தாமதமாவது, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற குற்றங்கள் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை கொடுத்தன. ஆனால் இப்போது, ரூ. 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமாக தண்டனை என்பது மாற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை மறிப்பது, அவசரகால சேவைகளை சீர்குலைப்பது, விபத்துகளை ஏற்படுத்துவது போன்ற குற்றங்களை ஒரு பெரு நிறுவனம் செய்துவிட்டு, பண ரீதியாக அபராதமாக செலுத்தி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம்.

வசதிக்கே முன்னுரிமை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்ற தேவையற்ற ஒலிப்பான் ஒலித்தல் உட்பட, மற்றும் உள்நாட்டு கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பான குற்றங்களுக்கான சிறைத்தண்டனை நீக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. இதன்மூலம், மாசுபடுத்துபவர்கள் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தொடரலாம், பின்னர் அபராதம் செலுத்திவிட்டு, தங்கள் செயல்பாடுகளைத் தொடரலாம். சுற்றுச்சூழல் சீரழிவு ஒரு பெரும் பொது சுகாதார நெருக்கடியாக இருக்கும் க்ல் நேரத்தில், புதிய மசோதாவால் நிலைத்தன்மையை விட வசதிக்கே முன்னுரிமை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு தீர்வு இல்லை

இந்த சட்டத்திருத்தம் கிராமப்புற மற்றும் தொழிலாளர் துறைகளுக்கும் பரவியுள்ளதால், வழிதவறிய கால்நடைகளால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படுத்தும் சேதம் இப்போது அபராதம் மட்டுமே விதிக்கப்படும் குற்றமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு உண்மையான தீர்வு எதுவும் கிடைப்பதில்லை. தொழிலாளர் சட்ட மீறல்களும் கப்பல் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதிகள் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் குற்றங்கள் பண அபராதங்களாக நீர்த்துப்போகச் செய்வதன் மூலம், ஏற்கனவே பலவீனமான பாதுகாப்புகளை மேலும் பலவீனப்படுத்துகிறது.

நீதிமன்றங்கள் அதிகாரம் குறைப்பு

நாம் காட்டாட்சியிலா இருக்கிறோம்? சட்டத்தின் ஆட்சி இருக்க வேண்டுமா? நீதிமன்றங்களின் அதிகாரம் நிர்வாகத்துக்கு மாறும் கட்டமைப்பு என்ற மற்றொரு குறைபாட்டின் மூலம், இனி தண்டனைகள் நீதிபதிகளுக்குப் பதிலாக அதிகாரிகளால் விதிக்கப்படும். மேல்முறையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவையும் நிர்வாகப் படிநிலைக்குள்ளேயே இருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. இது நீதித்துறை மேற்பார்வையை நீக்கி, அதிகாரத்தை நிர்வாகத்திற்குள் குவிப்பதன் மூலம், தன்னிச்சையான மற்றும் தவறான பயன்பாட்டின் அபாயம் அதிகரிக்கிறது. சட்ட நடைமுறைக்கு பதிலாக விருப்புரிமையையும், வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக ஒளிவுமறைவையும் கொண்டுவருகிறது.

பெரிய நிறுவனங்களுக்கு அபராதம்

ஜன் விஷ்வாஸ் மசோதா பெரிய நிறுவனங்களுக்கு அபராதத்தையும் , சாதாரண குடிமக்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு சுமையாகவும், கணிக்க முடியாததாகவும் கொண்ட இரண்டு அடுக்கு நீதி அமைப்பை உருவாக்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% அபராதத் தொகையை தானாக உயர்த்துவதற்கும் மசோதா அதிகாரம் வழங்கினாலும், அதிக நிதி ஆதாரங்களைக் கொண்ட நிறுவனங்களுக்குத் எதிராக செயல்பட வாய்ப்பில்லை. விதிமிறல்களுக்கு அபராதம் செலுத்துவது என்பது பட்ஜெட் செலவினங்களாக மாறும், அதே நேரத்தில் நீதி சமமற்றதாகிவிடும்.

பலவீனம்

டெல்லி காவல்துறை கட்டமைப்பின் கீழ் வரும் தவறான தீ எச்சரிக்கைகள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யத் தவறுதல், பதிப்புரிமைப் பதிவேடுகளில் தவறான பதிவுகள் உள்ளிட்ட சில குற்றங்களை முற்றிலுமாக நீக்குகிறது. இவை சிறியதாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பொறுப்புக்கூறல், தரவு ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது.

717 குற்றங்கள் குற்றமில்லை

ஜன் விஷ்வாஸ் விதிமுறைகள் திருத்தம் மசோதா நீதிமன்றங்களின் சுமையைக் குறைத்து, ஆய்வாளர் ஆட்சியை ஒழிக்கும் என்று ஒன்றிய அரசு கூறினாலும், மத்திய சட்டங்களில் ஏற்கனவே 7,300-க்கும் மேற்பட்ட குற்றவியல் பிரிவுகள் இருக்கும் நிலையில், விரிவான தாக்க மதிப்பீடு இல்லாமல் 717 குற்றங்களை குற்றமற்றதாக்குவது மிகுந்த கவலையை அளிக்கிறது. முந்தைய தேர்வுக் குழு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமை, போதுமான தண்டனைக் கட்டமைப்புகள் இல்லாமை, வகைப்பாடு இல்லாமை போன்ற சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும், அவை தீர்க்கப்படாமல் உள்ளன.

சட்டங்கள் விதிகளை மீறுவதற்கு வசதிக்காக அல்ல

சட்டங்கள் உருவாக்கப்பட்டது விதிகளை மீறுபவர்களுக்கு வசதியாக இருப்பதற்காக அல்ல; குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. தடுப்பு என்பது ஒரு தடையல்ல; அது ஒழுங்கையும் பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமானது. அர்த்தமுள்ள விளைவுகள் குறித்த அச்சம் நீக்கப்படும்போது, இணக்கம் பலவீனமடைந்து, சட்ட மீறல்கள் அதிகரிக்கும். விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவது கட்டாயமில்லை; மீறல்களுக்குப் பணம் ஈட்டலாம்; பொறுப்புக்கூறலை பேரம் பேசித் தீர்மானிக்கலாம் என்ற செய்தியை இந்த மசோதா அனுப்புகிறதோ என்ற அபாயத்தை கொண்டுள்ளது. இதன்மூலம், நீதியின் மீதான கவனம் வருவாய்க்கும், பாதுகாப்பின் மீதான கவனம் வசதிக்கும் திருப்புகிறது.

இந்த குறைபாடுகள் மற்றும் அபாயங்களால் தான் ஜன விஷ்வாஸ் சட்டத் திருத்த மசோதாவை அவசரமாக நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள், வல்லுநர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். குற்றங்களின் தெளிவான வகைப்பாடு, விகிதாசாரத் தண்டனைகள், கடுமையான மீறல்களுக்குப் போதுமான நீதித்துறை மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் மக்களைப் பாதுகாப்பதே அரசின் பொறுப்பாகும். எந்தவொரு சீர்திருத்தமும் நீதி, பொறுப்புக்கூறல், பொதுப் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்யாமல், வலுப்படுத்த வேண்டும்" இவ்வாறு திமுக எம்பி பி.வில்சன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+