பிடிவாதம் பிடிக்காதீர்கள்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்..மருத்துவர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை!
மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது, போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது, போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தமிழகம் முழுக்க தீவிரமாக அடைந்துள்ளது. போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை, காலி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 4 கோரிக்கையை வைத்து போராட்டம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வைத்த இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. போராட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றே எச்சரிக்கை விடுத்தார்.

போராட்டம் பேட்டி
இந்த நிலையில் மருத்துவர்கள் போராட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில், அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கத்தினர் மட்டும்தான் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சு இல்லை. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கத்தினர் போராடவில்லை. அவர்களுடன் நாங்கள் பேசி, தீர்வு கண்டுவிட்டோம்.

ஏற்க முடியாது
நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதை ஏற்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்கள் வரிப்பணத்தில் மருத்துவ மாணவர்கள் படிக்கிறார்கள்.

மக்கள் பணம்
ஒரு மருத்துவரை உருவாக்க மக்கள் பணத்தில் இருந்து 1.24 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. மருத்துவம் என்பது சேவை நோக்கம். நாங்களும் சேவை நோக்கத்துடன் ஆனவர்கள் படிப்பிற்கு நிதி அளிக்கிறோம்.

வேடிக்கை பார்க்க மாட்டோம்
பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது. போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும். என்ன நடவடிக்கை என்பதை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பதிலாக வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்.

நோக்கம் என்ன?
அரசுக்கு நெருக்கடி காட்டும் நோக்கில் போராட்டம் செய்து வருகிறார்கள். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் முன்வைக்கின்றனர், என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications