தாக்கப்பட்டதா சொன்னாரே! உடலில் எந்த காயத்தையும் செந்தில் பாலாஜி காட்டவில்லை! அடுக்கும் துஷார் மேத்தா
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் தாக்கியதாக கூறியிருந்தாரே உடலில் எந்த காயத்தையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை என துஷார்மேத்தா வாதம் செய்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமானது என மேகலா தாக்கல் செய்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கிற்கு 3-ஆவது நீதிபதி அமர்வு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 3ஆவது நீதிபதி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார். இதையடுத்து மேகலா இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்தார். அந்த மனு மீது கடந்த ஜூலை மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு நடந்த விசாரணையில் தங்கள் தரப்பு மேலும் வாதம் செய்ய வேண்டியுள்ளது என்பதால் இந்த வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அதன்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி வாதிட்டார். அவர் கூறுகையில் 5 நாட்களுக்கு மேல் அமலாக்கத் துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமை இல்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது தேறி வருவதால் அவரிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து மறுநாள் காவல் கோருகிறார்கள். செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்து செல்லக் கூடியவர் அல்ல. செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு பிறகு மூன்றாவது நீதிபதி நியமித்தது தவறு. வேண்டுமானால் பெரிய அமர்வை அமைத்திருக்கலாம். சட்டத்தை மாற்றி அமைக்க நீதிமன்றத்தில் அதிகாரமில்லை என வாதம் செய்தார்.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் முடிந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது அவர் செந்தில் பாலாஜி விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்துக் கொண்டே இருந்தார், இடையூறுகளையும் விளைவித்தார்.
வாக்குமூலம் பெற முயற்சித்த போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. அவருடைய கைதுக்கான காரணங்களை ஏற்கெனவே கூறிவிட்டோம். அமலாக்கத் துறை விசாரணை ஏன் தேவை என்பதையும் சொல்லிவிட்டோம். கைது செய்த போது தான் தாக்கப்பட்ட செந்தில் பாலாஜி கூறினாலும் அவருடைய உடலில் எந்த காயங்களையும் நீதிபதியிடம் காட்டவில்லை என துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.












Click it and Unblock the Notifications