அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. டெல்லியில் நடந்த மீட்டிங்! ஆலோசித்தது என்ன?
டெல்லி: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினரகன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் விலகியுள்ள நிலையில், அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறியிருந்தார். இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் அமித்ஷா இல்லத்திற்கு இரவு 8 மணியளவில் சென்ற எடப்படி பழனிசாமி அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சதிப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அதிமுக விவகாரங்கள், கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கலாம் என சொல்லப்படுகிறது.
அவர் மட்டும் தனியாக அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதிமுக மூத்த நிர்வாரிகளை அனுப்பிவிட்டு அவர் மட்டும் தனியாக ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனியாக சந்தித்து பேசினாரா?
எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதிக்க கூடும் என்றும் தெரிகிறது. இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பழனிசாமி வைத்த கோரிக்கையான, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது தொடர்பாகவும் அமித்ஷாவிடம் வலியுறுத்தி பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு டெல்லியிலேயே தங்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை தமிழகத்திற்கு திரும்புகிறார். டெல்லியில் இருந்து கோவைக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்று காலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை
நேற்று செனனையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை கட்சியில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார். எடப்பாடி பேசும் போது, தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா? இன்னொருவர் 18 எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்றவர்.
அவரை கட்சி யில் சேர்க்க வேண்டுமா? எனக்கு உறுதியான மனம் உண்டு. யாரும் என்னை மிரட்டிப் பார்க்க முடியாது. மத்தியில் உள்ளவர்கள் யாரும் நம்மை அச்சுறுத்த வில்லை" என்று பேசியிருந்தார். எடப்பாடி நேற்று இவ்வாறு பேசிய நிலையில் தற்போது டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து இருப்பது மிகவும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications