ராகுல்: வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி உடனே அறிவிக்கவில்லை ஏன் தெரியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பொறுத்து தேர்தலை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விதித்தது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் ராகுல் காந்தி வெற்றி பெற்ற, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யவும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
ராகுல், தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பின் போதே வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை.
டெல்லியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜீவ் குமார், ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 6 மாதங்களாகும். ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த கீழ் நீதிமன்றம், அத்தண்டனையை மேல்முறையீட்டுக்காக நிறுத்தி வைத்திருக்கிறது. ஆகையால் நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு ராஜீவ் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications