"தேர்தல் ஆணையம் ஒன்றும் போஸ்ட் ஆபீஸ் இல்லை.. தனி பவர் இருக்கு!" SIR வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: சார் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை ஒரு தபால் நிலையம் போலக் கருத முடியாது என்றும் அவர்களுக்கு எனத் தனி அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும், ஆதார் இருப்பதால் மட்டும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் சார் பணிகளை நடத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சார் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தொடங்கியது.

சுப்ரீம் கோர்ட்
அப்போது தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலியா பாக்ஸி அடங்கிய அமர்வு, "வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படும் படிவம் 6 இல் உள்ள பதிவுகளின் சரியான தன்மையைத் தீர்மானிக்கும் உள்ளார்ந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது" என்பதையும் வலியுறுத்தியது.
இந்த சார் நடவடிக்கைக்கு எதிரான இறுதிக்கட்ட விசாரணை, இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான இறுதியான ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
ஆதார்
மேலும், ஒரு வாக்காளரைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6இல் உள்ள தகவல்கள் சரியானது தானா என்பதைத் தீர்மானிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதையும் இந்த அமர்வு தெளிவுபடுத்தியது. மேலும், ஆதார் அட்டையின் நோக்கம் சில குறிப்பிட்ட காரணங்களாக மட்டும் வரையறுக்கப்பட்டது என்பதை நீதிபதிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மேலும், "ஆதார் சலுகைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் மட்டுமே. ரேஷன் பெறுவதற்காக ஒருவருக்கு ஆதார் வழங்கப்பட்டதால் மட்டும் அவர் வாக்காளராகவும் மாற வேண்டுமா? அண்டை நாட்டைச் சேர்ந்த ஒருவர் அங்கு வேலைக்கு வந்துள்ளார் என்றார் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா?" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தபால் நிலையம் இல்லை
தேர்தல் ஆணையம் ஒரு தபால் அலுவலகம் போலச் செயல்பட்டு, படிவம் 6ன் கீழ் தாக்கல் செய்யும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தானாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது. அதாவது தேர்தல் ஆணையம் தனக்கு வரும் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அதைச் சரிபார்க்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "சார் எனப்படும் இந்த சிறப்புத் தீவிர மறுஆய்வு செயல்முறை சாதாரண வாக்காளர்களுக்கு அரசியலமைப்பிற்கு முரணான சுமையைச் சுமத்துகிறது.. பலர் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் சிரமப்படுவார்கள்.. இதனால் அவர்கள் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த நடவடிக்கை அடிப்படை ஜனநாயகத்தையே பாதிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அதிகாரம்
இருப்பினும் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. முன்பு இதுபோல ஆய்வு நடத்தப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது. அதேநேரம் வாக்காளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு முறையாக அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
எப்போது விசாரணை
தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் சார் நடவடிக்கைக்கு எதிரான இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு சுப்ரீம் கோட்ர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா தொடர்பான மனுக்களுக்கு டிசம்பர் 1க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கேரளா வழக்கு டிசம்பர் 2ம் தேதியும் தமிழ்நாடு வழக்கு டிசம்பர் 4ம் தேதியும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். அதேபோல மேற்கு வங்க வழக்கு டிசம்பர் 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications