எத்தியோப்பியா எரிமலை.. 10,000 ஆண்டுகள் கழித்து இப்போது வெடித்து சிதறியது ஏன்? விஞ்ஞானிகள் சொன்ன காரணம்
டெல்லி: எத்தியோப்பியால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சலனமும் இன்றி இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து சிதறி ஆசியா நாடுகள் வரை பெரும் சாம்பல் புகைகளால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, எந்த முன் அறிகுறியும் இன்றி திடீரென வெடித்தது ஏன் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று எத்தியோப்பியா. அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இதனால், வானில் சுமார் 14 கி.மீ உயரத்துக்கு சாம்பலும் மேகங்களும் புகையும் சூழ்ந்துள்ளது.

வியப்பை ஏற்படுத்திய எரிமலை வெடிப்பு
இதன் காரணமாக பல்வெறு நாடுகளில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேகங்களில் சாம்பல் சூழ்ந்த நிலையில், ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியை சூழ்ந்துள்ளது. டெல்லியில் இரவு 7.30 மணி வரை நீடிக்கும் இந்த எரிமலை சாம்பல்கள், சீனா நோக்கி நகரும் என்று வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுமார் 10,000 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, இந்த வாரம் திடீரென வெடித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக அமைதியாக இருந்த எரிமலைகள் பெரும்பாலும் அணைந்துவிட்டதாகக் கருதப்படும் சூழலில் இந்த எரிமலை வெடிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
பூமிக்கடியில் நிகழும் பல்வேறு செயல்பாடுகள், பல்லாயிரம் ஆண்டுகளாக அதன் உட்புற அமைப்பை அமைதியாக மாற்றியமைத்து, திடீரென பேரழிவு தரும் சக்தியுடன் வெடிக்கச் செய்யும் என்பதை புதிய ஆய்வு காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறிய நிலையில், ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு இதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. திடீரென இந்த எரிமலை வெடிப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:-
ஹெய்லி குப்பி எரிமலையின் மறு செயல்பாட்டிற்கு அதன் மேக்மா பகுதியில் (உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் படிகங்கள் குவியும் நிலத்தடி நீர்த்தேக்கம்) ஏற்பட்ட ஒரு மாற்றம் காரணமாக இருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக, உருகிய எரிமலைக் குழம்பு மெதுவாக ஒரு செயலற்ற எரிமலைக்கு அடியில் குவியக்கூடும். ஆனால் மேற்பரப்பை அடையாமல் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
வெப்பமான மேக்மா நுழைகின்றபோது
பூமியின் ஆழத்திலிருந்து புதிய, வெப்பமான மேக்மா இதற்குள் நுழையும்போது, அது எரிமலை அமைப்பை மாற்றுகிறது. இந்த மறுஊட்டம் பழைய மேக்மாவை மீண்டும் சூடாக்கி, உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், வாயு குமிழ்கள் உருவாவதைத் தூண்டுகிறது. இந்த வாயு குமிழ்கள் முக்கியமானவை. ஆராய்ச்சிப்படி, அழுத்தம் அதிகரிக்கும்போது, மேக்மாவுக்குள் சிக்கியுள்ள வாயு விரிவடையத் தொடங்குகிறது.
மேக்மா மேற்பரப்பை நோக்கி உயரும்போது, அழுத்தம் குறைவதால் இந்தக் குமிழ்கள் வேகமாக வளர்ந்து, மிதப்புத்தன்மையை அதிகரித்து, மேக்மாவை மேல்நோக்கித் தள்ளுகின்றன. இந்த செயல்முறை திடீரென நடந்தால், அது தீவிரமான உட்புற அழுத்தத்தை உருவாக்கி, சுற்றியுள்ள பாறைகளை உடைத்து, எரிமலை வெடிப்பைத் தூண்டும். இது மட்டும் இன்றி ஹெய்லி குப்பியின் திடீர் செயல்பாட்டிற்குப் பல கூடுதல் காரணிகளும் பங்களித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சிறிய நிலநடுக்கங்கள் கூட
அதாவது, எரிமலைப் பகுதிகளில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்கள், மேக்மா வெளியேற புதிய வழிகளை உருவாக்கி, புவியோட்டில் உள்ள அழுத்தத்தை மாற்றியமைக்கலாம். சிறிய நில அதிர்வு உந்துதல்கள் கூட வாயு குமிழ்கள் பெரிதுபடுத்த வைக்கும். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிமலையை மூடியுள்ள பாறைத் தடைகளை பலவீனப்படுத்தலாம்.
உட்புற அழுத்தம் மேல் உள்ள பாறையின் வலிமையை விட அதிகமாகும்போது, எரிமலை வெடிக்கிறது. இது பெரும்பாலும் முன் அறிகுறியின்றி திடீரென நிகழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு செயலற்ற எரிமலை ஏன் வெடிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, உலகெங்கிலும் உள்ள பிற செயலற்ற அமைப்புகளில் உள்ள அபாயங்களை மதிப்பிட உதவும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
புவியியல் தூண்டுதல்கள்
செயற்கைக்கோள் தரவு, நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் பெட்ரோலாஜிக்கல் பகுப்பாய்வு ஆகியவை பூமிக்கடியில் நிகழ்வும் செயல்முறைகள் குறித்த தெளிவான நுண்ணறிவுகளை வழங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான எரிமலை அமைப்புகள் எப்படி அமைதியிலிருந்து வெடிக்கும் செயல்பாட்டிற்கு மாறுகின்றன என்பதை இவை வெளிப்படுத்துகின்றன.
செயலற்ற தன்மைக்கு சென்றுவிட்டதாக தோன்றும் எரிமலைகள் கூட, புவியியல் தூண்டுதல்களின் சரியான கலவைக்காகக் காத்திருந்து, மீண்டும் செயல்படலாம் என்பதை இந்த எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications