அடப்பாவமே.. மைக்ரோசாப்ட் முன்னாள் ஊழியருக்கே இந்நிலையா? 1000 இடத்தில் வேலைக்கு விண்ணப்பித்தும் சோகம்
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் 1000 நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பித்தும் ஒரு இடத்தில் கூட தனக்கு வேலை கிடைக்கவில்லை என தனது வேதனையை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், மெடா, ட்விட்டர் உள்ளிட்டவை கடந்த சில மாதங்களாக அதிக அளவிலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இதன் காரணமாக தொழில்நுட்ப நிறுவன வேலைகளுக்கான போட்டியும் அதிகரித்து உள்ளது.
ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் வேலை வாய்ப்புகளுக்காக காத்து உள்ளனர். மறுபக்கம் செலவினத்தை குறைக்க ஆயிரக்கணக்கானோரை நிறுவனங்களை வேலையைவிட்டு அனுப்பி வருகின்றன. இந்த சூழலில் வேலையை இழந்தவர்கள் மீண்டும் நல்ல வேலையை பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது.

அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பணிபுரிந்து வேலை இழந்த ஒரு நபருக்கும் நடந்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது. மார்ச் மாதம் அமெரிக்காவில் பணிபுரிந்த மேலும் 500 பேரை நீக்குவதாக அறிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர், லிங்கிட் இன் உட்பட பல நிறுவனங்களில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.
இவ்வாறு கடந்த மார்ச் மாதம் முதல் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த நிறுவனமும் வேலை தர அவருக்கு முன்வரவில்லை. இது தொடர்பாக லிங்கிட் இன்னில் அவர் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அதில்,
"ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்.
34 ஆள்சேர்ப்பு அழைப்புகள்.
12 மேலாளரின் நேர்காணல்கள்
3 இறுதி சுற்றுகள்
0 வேலை
இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடை போன்று உள்ளது. பலர் நேர்காணல்களில் பங்கேற்றும் அவர்கள், வேறொருவர் பணியில் சேர்க்க முடிவு செய்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக இது எனக்கு சவாலாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து எனக்கு குறைவான உதவியே கிடைக்கும். என்னுடைய கல்லூரி படிப்புக்கு நானே கட்டணம் செலுத்தி வருகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதுபோல் லே ஆஃப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளையும் துயரங்களையும் லிங்கிட்இன்னில் பதிவிட்டு வருகிறார்கள். லே ஆப்களை கண்காணிக்கும் layoff.fyi என்ற இணையதள தகவலின்படி கடந்த மாதம் 696 தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
மே மாதம் வரை 1.97 லட்சம் மென்பொறியாளர்கள் தங்கள் வேலையை இழந்து உள்ளார்கள். மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெல்லா, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், பொருளாதார சூழல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை காரணமாக பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து இருந்தார்.
"சில இடங்களில் இருந்த பணியாளர்கள் நீக்கப்பட்டு, முக்கிய இடங்களுக்கான பணியாளர்களை நியமித்து வருகிறோம்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய கணினியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சத்ய நாதெல்லா, "உலகம் முழுவதும் ஒவ்வொரு துறை மற்றும் பகுதிகளிலும் நிறுவனங்கள் மந்தநிலையில் இருப்பதாலும், ஒன்றை மற்றொன்று எதிர்பார்த்து உள்ளதாலும், முன்னெச்சரிக்கையுடன் அனைவரும் செயல்படுவதை பார்க்கிறோம்." என்றார்.


Click it and Unblock the Notifications
