டெல்லி பிரசாந்த் விஹாரில் மர்ம பொருள் வெடிப்பு! 2 மாதங்களில் 2வது முறை.. பொதுமக்கள் அச்சம்
டெல்லி: வடக்கு டெல்லியின் பிரசாந்த் விஹாரில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் அருகே சற்று நேரத்திற்கு முன்பு பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வெள்ளை நிற பவுடர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் பிரதான பகுதிகளில் ஒன்று பிரசாந்த் விஹார். வடக்கு டெல்லியில் இருக்கும் பிரசாந்த் விஹாரில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் அருகே சற்று நேரத்திற்கு முன்பு பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மர்ம பொருள் வெடிப்பு: இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் வந்த நிலையில், அது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், பலத்த வெடிச் சத்தம் கேட்க என்ன காரணம் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், "11.48 மணி அளவில் பிரசாந்த் விஹாரில் மர்மப் பொருள் வெடித்ததாக தகவல் கிடைத்தது. இப்போது சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்" என்றார். நல்வாய்ப்பாக இந்த மர்மப் பொருள் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.
சோதனை: போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையைத் தொடங்கினர். அதில் வெள்ளை நிற பவுடர் அங்கு இருப்பதைக் கண்டறிந்தனர். அது என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மேலும், இது சக்தி வாய்ந்த வெடிப்பு இல்லை என்றும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
அங்கு உள்ள ஸ்வீட் கடையை ஒட்டியுள்ள பன்சி வாலா பூங்காவின் எல்லைச் சுவருக்கு அருகில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடி விபத்து ஏற்பட்ட உடனேயே திடீரென குறிப்பிட்ட உயரத்திற்கு அங்கு வெள்ளை புகை சூழ்ந்துள்ளது. அங்கு வேறு எதாவது குண்டுகள் அல்லது மர்மப் பொருள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வெடிகுண்டு கண்டறியும் குழு மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
2வது முறை: இந்த பிரசாந்த விஹார் பகுதியில் 2 மாதங்களில் 2வது முறையாக இதுபோல மர்ம பொருள் வெடித்துள்ளது. முன்னதாக கடந்த அக். மாதம் 20ம் தேதி டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பள்ளி அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டது. அன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இன்று நடந்ததை போலவே சுற்றுச்சுவர் அருகே முதலில் வெடிப்பு சத்தம் கேட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை சூழ்ந்து இருக்கிறது. அதுவும் கூட சக்திவாய்ந்த வெடிப்பாக இல்லை.
சி.ஆர்.பி.எஃப் பள்ளிக்கு அருகே வழக்கமாகக் கூட்டம் இருந்தாலும், அன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை. இதனால் உயிரிழப்பு அல்லது காயம் யாருக்கும் ஏற்படவில்லை. இதனால் இரு மர்மப் பொருள் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications