"உலகமே இந்தியா பக்கம் திரும்பியது.. அப்போ பிரதமர் மோடி செய்த செயல்!" பன்ச் வைத்த அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லி: நியூசிலாந்து நாட்டிற்குச் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
கடந்த பிப். மாதம் ஆரம்பித்த உக்ரைன் போர் பல மாதங்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் இந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் இதுவரை பெரியளவில் பலன் தரவில்லை. பல மாதங்களாகவே இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதின்
இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரஷ்ய அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி, ''இது போருக்கான காலம் அல்ல. ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை இந்த உலகை ஒன்றாக வைத்திருக்கும்'' என்று தெரிவித்தார். போரைத் தொடர்ந்து பல மாதங்களாக புதின் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கர்
புதினிடம் பிரதமர் மோடி கூறியது உலக அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பல சர்வதேச ஊடகங்களும் கூட இதை வெகுவாக பாராட்டி இருந்தது. இந்தச் சூழலில் இப்போது நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் போர் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கோரிக்கை
ஆக்லாந்தில் தொழிலதிபர்கள் உடன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "நான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசி சென்று இருந்த போது, உக்ரைனில் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பைக் கவலையாக இருந்தது. ஏனெனில் அதற்கு மிக அருகே போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்த முறை உக்ரைன் போர் சமயத்தில் பல்வேறு உலக நாடுகளும் எங்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தது.

உலக நாடுகள்
ரஷ்யாவிடம் போரை நிறுத்த அறிவுறுத்துமாறு பல உலக நாடுகள் எங்களிடம் கேட்டுக் கொண்டன. அதன் அடிப்படையில் ரஷ்யாவிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். இந்த விஷயத்தில் நமக்கு பல்வேறு கவலைகள் உள்ளன. பலவேறு நாடுகளும் இது தொடர்பாக எங்களிடம் பேசின. ஐநாவும் கூட எங்களிடம் இது குறித்துப் பேசியது. போரை நிறுத்த எங்களால் செய்ய முடியும், அனைத்தையும் நிச்சயம் செய்வோம்" என்றார்.

நடுநிலை ஏன்
தொடர்ந்து உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலையான நிலைப்பாடு எடுத்தது குறித்துப் பேசி ஜெய்சங்கர், "பல்வேறு சந்தர்ப்பங்களில் உலக நாடுகள் சற்று வித்தியாசமான நிலைப்பாட்டை எடுப்பது இயற்கையானது. அது தான் பன்முகத்தன்மை.. ஒவ்வொரு நாடும் ஒரு விஷயத்தை வித்தியமாகக் கையாளும். மற்ற நாடுகளின் நிலைப்பாட்டின் நான் அவமதிக்க மாட்டேன்.

போரை முடிக்க வேண்டும்
உலக நாடுகள் பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை எடுத்து இருக்கும். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் இந்தியாவும் கூட தீவிரமாகவே உள்ளது. இந்திய நலன் மட்டுமின்றி உலக நலனையும் கருத்தில் கொண்டே தேவையான முடிவுகளை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் போர் தொடர்பாகப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications