பெண் அதிகாரிகளுக்கு முறையற்ற மெசேஞ்... இது ரொம்ப தப்பான விஷயம்... உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: ஜூனியர் அதிகாரிகளுக்கு முறையற்ற மெசேஞ்களை அனுப்புவதும், ஊர் சுற்றுவதும் நீதிபதி ஒருவரின் முறையான நடத்தை இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் தன் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஜூனியர் அதிகாரி ஒருவருக்கு பாலியல் ரீதியான முறையற்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், மூத்த அதிகாரியான அவர், தனது ஜூனியர் பெண் அதிகாரிகளுடன் முறையாக நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றார். இந்தக் கருத்தை ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி பாப்டே, "ஜூனியர் பெண் அதிகாரிகளுக்கு முறையற்ற மெசேஞ்களை அனுப்புவதும், ஊர் சுற்றுவதும் நீதிபதி ஒருவரின் முறையான நடத்தை இல்லை" என்றார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம், பெண் அதிகாரி தனது புகாரை வாபஸ் பெற்றதாகவும் எனவே, ஒழுங்கு நடவடிக்கை செல்லாது என்றும் வாதாடினார். அந்தப் பெண் தனிப்பட்ட சில காரணங்களுக்காகப் புகாரை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதனால் துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்றனர்.
பதவி உயர்வின் போது வேண்டுமென்றே அதற்கு இடையூறாக இந்த புகார் சுமத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். இது குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறுகையில், "அனைத்து புகார்களும் பதவி உயர்வின் போது தான் வெளிவரும். அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
ஆனால் இந்த விஷயத்தில் முறையான குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இந்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டு துறை ரீதியான விசாரணையை எதிர்கொள்ளுங்கள்" என்றார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications