இந்திய விண்வெளி துறையில் நிகழப்போகும் பெறும் சாதனை.. ககன்யான் மிஷனின் நோக்கமே இதுதான்!
டெல்லி: இந்தியா இதுவரை சொந்தமாக விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியதில்லை. முதல் முயற்சியாக ககன்யான திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறது. இந்நிலையில், விண்வெளி பயணம் மட்டுமல்லாது, ககன்யான வீரர்களில் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
விண்வெளி பயணம்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது என்பது உலக சாதனைதான். ஆனால் அதைவிட முக்கியமாக, இது சாமானிய மக்களுக்கும் அறிவியல் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். காலங்காலமாக விண்வெளி பயணங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும்போது இந்தியாவில் அது பேசுபொருளாக மாறுகிறது.

இப்படி இருக்கையில், சொந்த முயற்சியாக இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விண்வெளிக்கு பறப்பார்கள் என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.
கடைசி பயணம்: ஏற்கெனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். கடந்த 1982ம் ஆண்டு ரஷ்யா சல்யூட் 7 எனும் விண்வெளி நிலையத்தை ஏவியிருந்தது. அதற்கு மூன்றாம் தர நாடுகளிலிருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படியாக இந்தியாவிலிருந்து விமானப்படையின் போர் விமானி ராகேஷ் சர்மா 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இன்றுவரை இந்தியா சார்பில் விண்வெளிக்கு பறந்த ஒரே இந்தியர் இவர்தான்.
எதிர்பார்ப்பு: கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வி்ண்வெளிக்கு பறந்திருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினராகவும், அமெரிக்காவுக்காக விண்வெளிக்கு பறந்தவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்து இந்தியாவுக்காக விண்வெளியில் இந்தியர் 4 பேர் பறக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ்எஸ்: இந்நிலையில் இந்த ககன்யான் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் சில அப்டேட்களை கொடுத்திருக்கிறார். அதாவது ககன்யான் வீரர்களில் ஒருவர் ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்பதுதான் அந்த அப்டேட். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனுடன் விண்வெளி பயண ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது இந்திய வீரர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல நாசா பயிற்சி அளிக்கும் என்று அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.
தனியார் நிறுவனம்: இதற்காக இஸ்ரோ-நாசா-ஆக்ஸியம் ஸ்பேஸ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதில் ஆக்ஸியம் ஸ்பேஸ் என்பது தனியார் நிறுவனமாகும். இதுதான் ககன்யான் வீரர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் பணியை கவனித்துக்கொள்கிறது. இதனை மத்திய அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications