ஆர்டிகிள் 200யை மீறும் ஆளுநர் ஆர்என் ரவி.. தமிழக அரசு பரபர வாதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ஆர்டிகிள் 200யை ஆளுநர் ஆர்என் ரவி மீறி செயல்பட்டு வருகிறார். இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வாதாடிய நிலையில் தமிழக அரசிடம் 24 மணிநேரத்தில் பேசி முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்என் ரவிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் எனவும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 27 ம்தேதி விசாரணை நடந்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அபிேஷக் மான்வி சிங்கி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடுகையில், ‛‛சட்டத்தின்படி சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அதனை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பலாம். ஒருவேளை திருப்பி அனுப்பும் மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் தான் வழங்க வேண்டும். வேறு வழியில்லை. இதை தான் அரசியலமைப்பு சொல்கிறது. இதனை ஆளுநர் செய்யாவிட்டால் மொத்த ஜனநாயகமும் தோற்றுவிடுகிறது.
2020 ஜனவரி 13ம் தேதி முதல் 2023 ஏப்ரல் 20ம் தேதி வரை மொத்தம் 12 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதைய ஆளுநர் 2021 நவம்பர் 18 ம் தேதி பொறுப்பேற்ற நிலையில் 2 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் ஒப்புதல் தருவதை தவிர வேறு வழியில்லை. மீதமுள்ள 10 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 10 மசோதாக்களும் நிலுவையில் உள்ளது'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பார்திவாலா, ‛‛ஜனாதிபதிக்கு எதன் அடிப்படையில் மசோதா அனுப்பப்படுகிறது? இது சரியா, தவறா? மசோதா மீது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை கேள்வி கேட்க முடியுமா? மேலும் உங்களின் பிரச்சனை என்னவென்றால் 2வது முறையாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்க கூடாது? என்பது தானே என்று கேள்விகள் எழுப்பினார்
அதற்கு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‛‛இது அரசியலமைப்பை சீர்குலைக்கும் செயல். ஆளுநரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியும். ஆனால் மீண்டும் அந்த மசோதா சட்டசபை மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஆர்டிக்கிள் 200ன்படி அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாவை நிறுத்தி வைக்க கூடாது. இது ஆர்டிகிள் 200ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
இதற்கு நீதிபதி பார்திவாலா, ‛‛எந்த வகையான மசோதாக்கள் இது?'' என்று கேட்டார். அதற்கு முகுல் ரோத்தகி, ‛‛அந்த மசோதா பற்றிய விபரங்கள் தரப்படவில்லை. ஆனால் மசோதாவின் சாராம்சம் என்பது பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் உள்ளார். அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வதோடு, பல்கலைக்கழக சட்டங்களில் மாற்றம் செய்வது தொடர்பானதாக உள்ளது'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பார்திவாலா, ‛‛விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரங்களுக்கு எங்களால் என்ன நிவாரணம் தர முடியும்?'' என்று கேட்டார். அதற்கு முகுல் ரோத்தகி, ‛‛ஆர்டிகிள் 200ன்படி ஆளுநர் மசோதாவுக்கான ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்க முடியாது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியும்'' என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 24 மணிநேரத்துக்குள் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசி முடிவெடுக்க வேண்டும். ஆளுநர், அரசு இடையேயான மோதலில் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தேநீர் விருந்து வைத்து கூட பேசி முடிவெடுக்கலாம். ஆளுநர் ரவி எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.
நாளை மறுநாள் மீண்டும் தமிழக அரசு தரப்பு வாதம் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஆளுநர் தரப்பில் அட்டார்னி ஜெனரல் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications