பெரும் எதிர்பார்ப்பு.. 2 கட்டங்களாக நடக்கிறது குஜராத் சட்டசபை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இமாசல பிரதேசம், குஜராத் அகிய இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இமாசல பிரதேச தேர்தல் தேதியை மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவித்தது.

குஜராத்திற்கு எப்போது
இமாசல பிரதேச மாநிலத்திற்கு வரும் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்? என பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டும் இதே போல தனித்தனியாகத்தான் அறிவிக்கப்பட்டது என்றும் இந்த விவகாரத்தில் விதிகளின் படியே தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் ஆணையம் விளக்கம் அளித்தது.

4 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள்
இதனால், குஜராத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், இன்று குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது:- குஜராத் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க 4 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

2 கட்டங்களாக தேர்தல்
182 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்தலில் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும். குஜராத் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்டமாக டிசம்பர் 1-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 5-ஆம் தேதியில் தொடங்கி 14-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நவம்பர் 15-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நவம்பர் 17-ஆம் தேதி கடைசி நாள்.

முடிவுகள் எப்போது
இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5-ஆம் தேதி 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். இதில் வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 10-ஆம் தேதியில் தொடங்கி 17-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்கள திரும்பப்பெற நவம்பர் 21-ஆம் தேதி கடைசி நாள். இதை தொடர்ந்து தேர்தல் முதல்கட்டமாக டிசம்பர் 1-ஆம்தேதியும்,2-ஆம் கட்டமாக டிசம்பர் 5-ஆம் தேதியும் நடைபெறும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்படும். குஜராத் மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளானது டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 சிலிண்டர்கள் இலவசம்
குஜராத்தை பொருத்தவரை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகவும் பாஜகவின் கோட்டையாகவும் திகழ்கிறது. அந்த மாநிலத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அதாவது தொடர்ந்து 5 முறை ஆட்சியை பிடித்துள்ள பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவ வைத்து 6-வது முறையக ஆட்சியை தொடரும் முனைப்பில் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பல்வேறு சலுகைகளை குஜராத் அரசு அறிவித்து வந்தது. வருடத்திற்கு 2 சிலிண்டர்கள் இலவசம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.

தொங்கு பால விபத்து
தேர்தல் பணிகளையும் பாஜக முடுக்கி விட்டு வெற்றியை பெற வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தனைக்கும் இந்தப் பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து விபத்து வெகு சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டு இருந்தது. இதனால், குஜராத் அரசு மீது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜகவுக்கு காத்திருக்கும் சவால்
இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்து பாஜகவை கார்னர் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் குஜராத்தில், வெற்றியை பாஜகவிடம் இருந்து பறிக்க தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், இந்த தேர்தல் பாஜகவுக்கு கடும் சவாலகவே இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications