ரிஸ்க் எடுத்தற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது - தடுப்பூசி அனுமதி பற்றி சீரம் சிஇஓ ஆதார் பூனவல்லா
டெல்லி: தடுப்பு மருந்து ஒப்புதலுக்கு முன்னரே, அதை உற்பத்தி செய்து சேமித்து வைத்து ரிஸ்க் எடுத்ததற்குப் பலன் தற்போது கிடைத்துள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்
சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இன்று தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஸ்க் எடுத்ததற்குப் பலன்
இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். தடுப்பு மருந்துகளைச் சேமித்து வைத்து ரிஸ்க் எடுத்த சீரம் நிறுவனத்திற்கு இறுதியாகப் பலன் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மிகவும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இந்தத் தடுப்பு மருந்து இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

கோவிஷீல்ட்
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து இந்த கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பு மருந்தை கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

ஒப்புதலுக்கு முன்னரே சேமிப்பு
தடுப்பு மருந்திற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னரே, இந்தத் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து சேமித்து வைக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டவுடன் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளை விரைவில் மேற்கொள்ள முடியும்.

இந்தியாவுக்குப் பாதி
இதுவரை ஐந்து கோடி தடுப்பு மருந்து டோஸ்களை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து, சேமித்து வைத்துள்ளது. இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் சுமார் 50% மேல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் தடுப்பு மருந்து
இந்தியா தவிர வளரும் மற்றும் அனைத்து பின்தங்கிய நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்தே அனுப்பப்படும். அனைத்து நாடுகளுக்கும் மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸும் சீரம் நிறுவனத்திற்கு உதவி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications