ராஜ்யசபா துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ் நாராயண்சிங் தேர்வு!
டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் (ஜேடியூ)-ன் எம்.பி. பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதனால் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவி காலியானது.

இதையடுத்து இன்று ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஜேடியூவின் ஹரிவன்ஷ் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஆர்ஜேடியின் மனோஜ் ஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார். இன்று பிற்பகல் ராஜ்யசபா கூடியது. அப்போது புதிய எம்.பிக்கள் பதவி ஏற்றனர். பின்னர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் சபை கூடியதும் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் ஹரிவன்ஷ் மீண்டும் துணைத் தலைவராக தேர்வு பெற்றதாக ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications