இமயமலை தியானம், கன்னியாகுமரி தவம், கும்பமேளா புனித நீராடல்- சர்ச்சையாகும் மோடியின் ஆன்மீக 'உலா'க்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இமயமலையில் தியானம் செய்தார், கன்னியாகுமரி முனையில் நடுக்கடலில் தியானம் செய்தார்.. தற்போது மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார் மோடி. ஆனால் இந்த ஒவ்வொரு ஆன்மீக பயணமும் பெரும் சர்ச்சைக்குரியதாகிவிடுகிறது.

இமயமலை தியானம்
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைந்த மறுநாள் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் உள்ள கேதார்நாத் புனித தலம் சென்றார் பிரதமர் மோடி. கேதார்நாத் கோவில் அருகே தியான குகையில் பகலில் தொடங்கி இரவும் அங்கே தங்கி தியானம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அந்த குகையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பிரசாரம் மட்டுமே முடிவடைந்திருந்த நிலையில் வாக்குப் பதிவு நடைபெற வேண்டிய நிலையில் பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த தியானப் பயணம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின; தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுத்தன. ஆனாலும் பிரதமர் மோடி தமது தியானப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.
கன்னியாகுமரி தவம்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னரும் பிரதமர் நரேந்திர மோடி அதேபோல ஒரு தவப் பயணம் மேற்கொண்டிருந்தார். 2019-ல் வடக்கே தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 2024-ல் தெற்கே கன்னியாகுமரி முனையில் நடுக்கடலில் விவேகானந்தா பாறையில் உள்ள நினைவிடத்தில் தவமிருந்தார். உருத்திராட்ச மாலையுடன் இரவும் நடுக்கடலிலேயே தங்கி தவமிருந்தார் பிரதமர் மோடி. இந்த காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது; தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போதும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கும்பமேளாவில் புனித நீராடும் மோடி
தற்போது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு நடைபெறும் மகா கும்பமேளா எனப்படும் ஆன்மீக ஒன்று கூடல் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உ.பி. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி பங்கேற்று புனித நீராடுகிறார். டெல்லி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் புனித நீராடுவதும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கங்கை அன்னைக்கு பிரார்த்தனை
பிரதமர் மோடியின் இன்றைய கும்பமேளா பயணம் தொடர்பாக மத்திய அரசு தெரிவிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார்.
பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications