“அறிவியல், நீதித்துறை, காவல்துறையின் மொழியாக இந்தி இருக்க வேண்டும்!” அமித்ஷா வலியுறுத்தல்
டெல்லி: இந்தியாவில் அறிவியல், நீதித்துறை, காவல்துறையின் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால்தான் அந்த துறைகள் அனைத்தும் மக்களுக்கானதாக இருக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற 5-வது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளனத்தின் துவக்க விழாவில் பங்கேற்றிருந்த அமித்ஷா இவ்வாறு பேசியிருக்கிறார்.

எல்லாவற்றிலும் இந்தி மொழி
மேலும் அவர் பேசியதாவது, "இந்திக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எந்தவித சண்டையும் இல்லை. தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, கே.எம். முன்ஷி, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அறிஞர்கள் இந்தி மொழியை ஏற்றுக்கொண்டு மேம்படுத்தினர். குஜராத்தி மற்றும் இந்தி மொழிகள் இணைந்து வளர்ந்த குஜராத் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தி வெறும் பேச்சு மொழியோ அல்லது நிர்வாக மொழியோ அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல்துறையின் மொழியாகவும் இருக்க வேண்டும்.
இந்தத் துறைகளில் இந்திய மொழிகள் பயன்படுத்தப்படும்போது, மக்களுடனான தொடர்பு தானாகவே வலுப்பெறும். சமஸ்கிருதம் 'அறிவின் கங்கையை' நமக்கு அளித்தது. இந்தி அதை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது. உள்ளூர் மொழிகள் மூலம் அந்த அறிவு ஒவ்வொருவரையும் சென்றடைந்தது.
தாய்மொழியின் அவசியம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தாய்மொழியிலேயே பேச வேண்டும். குழந்தையின் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியம். உளவியலாளர்களும், கல்வியாளர்களும் ஒரு குழந்தை தனது தாய்மொழியில்தான் சிந்திக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு குழந்தையின் மீது தாய்மொழி அல்லாத ஒரு மொழியைத் திணிக்கும்போது, குழந்தையின் மனதின் செயல்பாடுகள் 25 முதல் 30 சதவீதம் அதை மொழிபெயர்ப்பதிலேயே செலவிடுகிறது.
இந்திய மொழிகள் துறை
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்தப் பாடுபட்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் 'பாரதிய பாஷா அனுபாக்' (இந்திய மொழிகள் துறை) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளது. இது இந்தி மற்றும் பிற மொழிகளை ஊக்குவிக்கும். இந்த நோக்கத்திற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தி கற்றால் நன்மையாம்
மகாத்மா காந்தி, தயானந்த சரஸ்வதி போன்ற தலைவர்களால், குஜராத்தில் இந்தி கல்வி முக்கிய இடத்தைப் பெற்றது. அவர்கள் மக்களை ஒருவருக்கொருவர் இந்தியில் தொடர்பு கொள்ளவும், மாநிலம் முழுவதும் இந்தி மொழியை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டனர். இதன் விளைவாக, குஜராத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வியாபாரம் செய்ய முடியும். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தால் இயங்கும் 'பகுபாஷி அனுவாத் சார்த்தி' மொழிபெயர்ப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று கூறியிருக்கிறார்.
'பகுபாஷி அனுவாத் சார்த்தி' என்பது AI மொழிபெயர்ப்பு மென்பொருளாகும். இது அரசாங்கத்தின் பாஷினி திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நிகழ் நேரத்தில் ஒரு இந்திய மொழியை வேறு இந்திய மொழியாக மொழியாக்கம் செய்யும். உதாரணத்திற்கு நீங்கள் 'வணக்கம்' என்று சொன்னால், அதை தெலுங்கில் 'நமஸ்காரம்' என மொழிபெயர்ப்பு செய்யும்.
அமித்ஷா மேலும் பேசுகையில், "இந்த மென்பொருளுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம், மேலும் மேம்படுத்துவோம். வரும் நாட்களில் மக்கள் தங்கள் சொந்த மொழியில் இதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். தகவல் தொடர்பு மொழி சொந்த மொழி இல்லை என்றால், சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் அடைய முடியாது.
இந்தி அகராதி
ஆரம்பத்தில் 51,000 வார்த்தைகளுடன் துவங்கிய 'இந்தி ஷப்த் சிந்து' எனும் இந்தி அகராதி. தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்டுள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய அகராதியாக இது மாறும். இந்த அகராதி மூலம், இந்தியை நெகிழ்வுத்தன்மையுடன் உருவாக்கியுள்ளோம். பல இந்தி அறிஞர்கள், இந்தி சமஸ்கிருதச் செழுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதற்கு யாருக்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், இந்திய மொழிகளால் காலியான இடங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் இந்தி இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகும். மேலும், இந்தி நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்போது மட்டுமே பேச்சு மொழியாக மாற்ற முடியும்.
காலத்திற்கேற்ப பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். காலத்திற்கேற்ப மாறாதவர்கள் வரலாறாகிவிடுவார்கள். நமது மொழி வரலாறுதான், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் ஷப்த் சிந்துவின் பரிசோதனை, இந்தியை மிகவும் பயனுள்ளதாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும், பொதுமக்களுக்குப் பயனுள்ளதாகவும் மாற்றுவதாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications