"ரயில் இன்ஸ்சூரன்ஸ்.." வெறும் 35 பைசாவுக்கு 10 லட்சம் இழப்பீடு! டிக்கெட் போடும் போது இதை மறக்காதீங்க
டெல்லி: ரயில்களில் பயணம் செய்யும் போது மிகக் குறைந்த தொகையில் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பது தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒடிசா மாநிலத்தில் நேற்றைய தினம் மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இப்படியொரு மோசமான விபத்து நடந்ததே இல்லை. உலகெங்கும் பல தலைவர்கள் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த இந்த ரயில் விபத்தில் இதுவரை 261 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல பல நூறு பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்து: நேற்றிரவு 7 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அதன் பின்னர் விடிய விடிய மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், மீட்புப் பணிகள் இன்று மதியம் நிறைவடைந்துவிட்டன. இப்போது அங்கே தண்டவாளத்தில் இருக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்தில் தமிழர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா.. அல்லது காயமடைந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை எதுவும் வெளியாகவில்லை.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனேயே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சம்பவ இடத்திற்கு விரைந்துவிட்டார். அதேபோல இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியும் விபத்து நடந்த இடத்திற்கு வந்துள்ளார். இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், டிக்கெட் முன்பதிவு செய்யப் பயன்படும் ஐஆர்சிடிசி தளத்தில், நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காப்பீடு செய்யும் வசதி குறித்து உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்சூரன்ஸ்: ரயில்வே பயணக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே வெறும் 35 பைசாவுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். ஐஆர்சிடிசி இந்த காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இந்த காப்பீட்டின் கீழ், பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்களை இழக்கும் போது இழப்பீட்டைப் பெறுவார்கள். இதற்காக நாம் டிக்கெட்டுடன் சேர்த்து வெறும் 35 பைசா மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டும்.
மேலும், விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகள் வழங்கப்படும். அதேபோல உயிரிழப்பு ஏற்பட்டால், நாமினிக்கு இழப்பீடு வழங்கப்படும். ஒரு பயணி ரயில் விபத்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். அதேநேரம் partially disabled எனப்படும் ஊனம் ஏற்பட்டால், இழப்பீடாக 7.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். பலத்த காயம் ஏற்பட்டால், 2 லட்ச ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டால் 10,000 ரூபாயும் வழங்கப்படும்.
ரயில் காப்பீட்டைப் பெறுவது எப்படி: விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து 4 மாதங்களுக்குள் காப்பீட்டைக் கோர வேண்டும்.. பயணிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கோரிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும் போது பயணிகள் நிச்சயம் நாமினியின் பெயரை நிரப்ப வேண்டும். அப்போது தான் அசம்பாவிதம் நடந்தால் காப்பீட்டைக் கோரும் போது எந்தவொரு பிரச்சினையும் வராது.












Click it and Unblock the Notifications