பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல்! முடியை வைத்து பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தை கண்டுபிடித்தது எப்படி
டெல்லி: நம்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருபவர் அஜித் தோவல். இவர் 1980 காலக்கட்டத்தில் உளவுத்துறையில் பணியாற்றியபோது பாகிஸ்தானில் பிச்சைக்காரராக நடித்து அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்கள் குறித்த விவரங்களை கண்டுபிடித்தது எப்படி? சலூன் கடையில் கிடைத்த பாகிஸ்தான் விஞ்ஞானியின் தலைமுடியை வைத்து அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களை 15 ஆண்டுகளாக முடக்கிப்போட்டது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். நம் நாட்டின் பாதுகாப்பில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்தை கொண்டது. நம் நாட்டில் உள்ள முக்கிய பொறுப்புகளின் வரிசையில் 7 வது இடத்தில் உள்ளது.

அஜித் தோவல் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் உத்தரகாண்ட்டில் பிறந்தவர். 1968 ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். கேரளாவில் பணியை தொடங்கினார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு மாறினார். உளவுத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றினார். கடந்த 2005ம் ஆண்டில் உளவுத்துறையின் இயக்குநராக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு கடந்த 2014 ம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தானில் உளவு பணி
அஜித் தோவல் உளவுத்துறையில் பணியாற்றியபோது பாகிஸ்தானுக்கு சென்று உளவு பார்த்தது நம்மில் பலரும் கேள்விப்பட்டு இருப்போம். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஜித் தோவல் பாகிஸ்தானில் பிச்சைக்காரராக வேடமிட்டு அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களை தாமதப்படுத்தியது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி டி தேவ்தத்தின் 'அஜித் தோவல் - ஆன் ய மிஷன்' (D Devdutt's Book,Ajit Doval - On a Mission) என்ற புத்தகத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் வருமாறு:
அணுசக்தி திட்டத்தில் பாகிஸ்தான்
1980 காலக்கட்டத்தில் உளவுத்துறையில் பணியாற்றினார் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இந்தியா கடந்த 1974ம் ஆண்டில் பொக்ரானில் முதல் முதலாக அணுசக்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றது.
இது பாகிஸ்தானுக்கு பிரச்சனையானது. எப்படியாவது இந்தியாவை போல் அணுசக்தி சோதனையை வெற்றிக்கரமாக நடத்தி விட வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தது. சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அதற்கான பணியை மிகவும் ரகசியமாக மேற்கொண்டது.
பாகிஸ்தான் விரைந்த அஜித் தோவல்
இதனை நம் நாட்டின் உளவுத்துறை மோப்பம் பிடித்தது. பாகிஸ்தானின் ரகசிய அணுசக்தி திட்டத்தை உலகறிய செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டவர் தான் அஜித் தேவால். ஏற்கனவே ‛சிக்கிம் மிஷன்' திட்டத்தில் அஜித் தோவல் சிறப்பாக செயல்பட்டு இருந்ததால் அவரை நம்பி இந்த பெரிய டாஸ்க் ஒப்படைக்கப்பட்டது. அஜித் தோவல் பாகிஸ்தானுக்கு சென்றார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கஹுதா (Kahuta)என்ற நகருக்கு அஜித் தோவல் சென்றார். இங்கு ‛கான் ஆராய்ச்சி மையம்' (Khan Research Centre) அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களுக்கான பணிகளை விஞ்ஞானிகள் நடத்தி வந்தனர். இதனால் இந்த மையத்தை சுற்றி எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இருப்பினும் அஜித் தோவல் அந்த பகுதியை அடைந்தார்.
பிச்சைக்காரர் போல் வேடமிட்டு
பாகிஸ்தானில் அஜித் தோவல் பிச்சைக்காரர் போல் வேடமிட்டு உளவு பார்த்தார். கிழிந்த சால்வை அணிந்து தூசி பறக்கும் ரோட்டில் அவர் சக பிச்சைக்காரர்களை போல் பிச்சையெடுத்தார். பல நாட்களாக கவனித்து, மேலும் ஒவ்வொரு நாளும் விஞ்ஞானிகளின் நடமாட்டத்தை அவர் உன்னிப்பாக கவனித்து வந்தார். பிச்சைக்காரராக அஜித் தோவல் வேடமிட்டு இருந்ததால் பாகிஸ்தான் விஞ்ஞானிகள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினருக்கு அவர் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.
தொடர்ந்து நோட்டமிட்டபோது தான் அஜித் தோவலுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலரும் குறிப்பிட்ட சலூன் கடைக்கு சென்று முடி திருத்தி கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சலூன் கடைக்கு சென்ற அஜித் தோவல் வெட்டப்பட்ட விஞ்ஞானிகளின் முடிகளை சேகரித்து நம் நாட்டுக்கு அனுப்பினார். அந்த முடிகளை ஆய்வு செய்தபோது யுரேனியம் உள்பட பிற கதிர்வீச்சு முடியில் இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்து வருவதற்கு இது சரியான ஆதாரமாக அமைந்தது.
15 ஆண்டுகள் தாமதம்
இதையடுத்து நம் நாடும் பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்தியது. மேலும் உலக நாடுகளுக்கும் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை பற்றிய தகவலை இந்தியா வழங்கியது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அணுசக்தி திட்டத்தை மேற்கொண்டு அணுஆயுதம் தயாரிப்பது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக மாறியது. அஜித் தோவலின் இந்த செயல் என்பது பாகிஸ்தானின் அணுஆயுத சோதனையை 15 ஆண்டுகளுக்கு மேலாக தாமதப்படுத்தியது என புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications