அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவை எந்த அளவிற்கு பாதிக்கும்.. தமிழ்நாடு அறிய வேண்டியது.. ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டினை பெரிதும் சார்ந்து, ஏற்றுமதியை குறைவாக நம்பியிருப்பதன் காரணமாக, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கம் இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என்று எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா 6.7-6.8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்டும் என்று எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் யீஃபார்ன் புவா கணித்திருக்கிறார்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி அமெரிக்காவிற்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு, பதிலுக்கு அதே அளவு அதிக வரிவிதிக்க முடிவு செய்துள்ளார். இப்படி இந்தியாவிற்கு எதிராக விரைவில் அதிக வரி விதிக்கப்பட உள்ளது.

ஏனெனில் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, எஃகு பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியையும், சில அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதத்தையும் விதித்தது. பதிலடியாக, ஜூன் 2019 இல் இந்தியா 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு கூடுதல் சுங்க வரிகளை விதித்திருந்தது. கடந்த 2023ம் ஆண்டு தான் இந்தியாவிலிருந்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிகளை அமெரிக்கா நீக்கியது. இதன் தாக்கம் ஐந்து ஆண்டுகள் வரை இருந்தது.
இதனிடையே டிரம்ப் கடந்த முறையை போல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டால் சில பாதிப்புகள் ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில் என்ன மாதிரியான நமது நாட்டில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் யீஃபார்ன் புவா விளக்கம் அளித்துள்ளார்.
யீஃபார்ன் புவா கூறும் போது, இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு நுகர்வோர்களை சார்ந்து தான் உள்ளது. வளர்ச்சிக்காக இந்தியா மிகப்பெரிய அளவில் ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்கவில்லை. எனவே, (அமெரிக்க வரிகளின்) தாக்கம் ஒரு சில விஷயங்களில் மட்டும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பொருட்கள் தரப்பில் அதிக வரிகளுக்கு ஆளாகக்கூடிய துறைகள் என்றால் நகைகள், மருந்துகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் போன்றவை இருக்கலாம். அதேநேரம் இந்தியாவில் இருந்து வரும் மருந்துகளுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதிக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் அதிக வரி விதித்தால், அமெரிக்க மக்களுக்கு சுகாதார செலவுகள் அதிகரிக்கும். எனினும் ஜவுளி மற்றும் ஓரளவிற்கு ரசாயனங்கள் அதிக வரிகளுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த முறை ஆண்டபோது இருந்த சூழ்நிலையை போல் இல்லாமல், நாம் மறுபரிசீலனை செய்தால், ஒட்டுமொத்தமாக இந்தியா மீதான தாக்கம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
மத்திய பட்ஜெட் குறித்தும் எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் யீஃபார்ன் புவா பேசுகையில், "2025-26 நிதியாண்டின் பட்ஜெட் அடுத்த சில ஆண்டுகளுக்கு வளர்ச்சியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் வீடுகளுக்கான வரி குறைப்புகள் மூலம் உள்நாட்டு தேவைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இப்போது மிகவும் "நிலையான" நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதேநேரம் மத்திய அரசு முதலீடு சார்ந்த வளர்ச்சியிலும் விவசாயத் துறை சீர்திருத்தங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இருப்பினும், கொரோனாவிற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையான வளர்ச்சி சராசரியாக 8.3 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மிகவும் நிலையான நிலையை நோக்கி இயல்பாக செயல்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தற்போது, நுகர்வோர் செலவு மற்றும் பொது முதலீடுகள் போன்றவைகள் காரணமாக, இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சுமார் 6.7 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வளர்ச்சி விகிதங்கள், முன்பை விட மெதுவாக இருந்தாலும், இதே நிலையில் உள்ள மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது சிறப்பானதே.. வருமான வரி குறைந்தாலும், நாட்டிற்கான வருவாய் வளர்ச்சியை தொடர்ந்து ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.
அதிகாரப்பூர்வ கணிப்புகளின்படி, இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் (2024-25) 6.4 சதவீதமாக வளரும். இது 2023-24 இல் 8.2 சதவீதத்தை விட குறைவு தான். எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் இந்தியாவுக்கு 'பிபிபி-' என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்தியாவின் நிதி அளவீடுகள் தொடர்ந்து மிகவும் நேர்மறையாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் கடந்த சில ஆண்டுகளில் தற்போது சுமார் 12 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்த நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் முறையே 4.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு அடையும் என்று எஸ் அண்ட் பி நம்புகிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications