காஷ்மீர் விவகாரத்தில் பாக். ஆதரவு கருத்து- கொந்தளித்த நெட்சன்கள்! கடைசியில் விளக்கம் அளித்த ஹூண்டாய்
டெல்லி: காஷ்மீர் விகாரம் தொடர்பாக ஹூண்டாய் டீலரின் சமூக வலைத்தளப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் காஷ்மீரில் அமைதியற்ற ஒரு சூழல் இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் ஹூண்டாய் டீலர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகக் காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை கருத்து
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனம் ஹூண்டாய். உலகின் பல நாடுகளிலும் சந்தையைக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்து 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டிலும் இந்தியா கார் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, hyundaiPakistanOfficial என்ற பெயரில் உள்ள பாகிஸ்தான் ஹூண்டாய் டீலர் தெரிவித்த கருத்து தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்
ஒவ்வொரு ஆண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகக் காஷ்மீரில் பிப்ரவரி 5ஆம் தேதி "காஷ்மீர் ஒற்றுமை தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கடந்த பிப். 5ஆம் தேதி பாகிஸ்தான் டீலர் ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீர் தற்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக இருப்போம் என்றும் பதிவிட்டிருந்தனர். இது மிகப் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக Boycott Hyundai என்ற ஹேஷ்டேக்கும் இந்தியாவில் இருந்து ட்விட்டரில் டிரெண்டானது.

ஹூண்டாய் விளக்கம்
இந்தச் சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "ஹூண்டாய் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தையில் உறுதியாக உள்ளது. நாட்டின் தேசியவாதத்தை மதித்து அதில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு, நாட்டிற்கான எங்கள் இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் சேவையைத் தொடர்ந்து அளித்து வருகிறோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்
இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இது போன்ற செயல்களுக்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுக்காகவும் இந்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த பாகிஸ்தான் டீலரின் ட்விட்டர் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விளக்கத்தைத் தொடர்ந்து பிரச்சினை சற்றே ஓய்ந்துள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய்
இந்தியாவில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ள ஹூண்டாய் மோட்டார், தற்போது உள்நாட்டுச் சந்தையில் க்ரெட்டா மற்றும் வென்யூ உள்ளிட்ட 12 மாதிரிகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த டிசம்பரில் தான், மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் சுமார் ₹ 4,000 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1967 இல் தொடங்கப்பட்ட ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications