மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான்.. என்னை தடுக்க ஆளுநர் யார்? சட்டசபையில் கேஜ்ரிவால் ஆவேசம்
டெல்லி: "நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்.. என்னை தடுப்பதற்கு ஆளுநர் யார்? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சட்டசபையில் ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.
டெல்லி ஆசிரியர்கள் பின்லாந்து நாட்டிற்கு பயிற்சிக்கு செல்லும் திட்டத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளிக்க மறுத்ததை கண்டித்து, கேஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக பொதுவெளிகளில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பல முறை பேசியிருந்தாலும், சட்டசபையில் அவரை கடுமையாக விமர்சித்து பேசுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இடைவிடாத மோதல்
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கும் இடையே ஆரம்பம் முதலாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி அரசு கொண்டு வரும் பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், அரசின் கொள்கை முடிவுகளை நிராகரிப்பதுமாக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றங்களில் டெல்லி அரசு பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளது.

சட்டசபையில் சீறிய கேஜ்ரிவால்
இந்த சூழலில், டெல்லி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் முன்மொழிந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். மேலும், வெளிநாட்டிற்கு ஆசிரியர்களை அழைத்து செல்வதால் தேவையில்லாத செலவு ஏற்படுகிறது என்றும், உள்நாட்டிலேயே அவர்களுக்கு பயிற்சி வழங்கலாம் எனவும் ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தார். இதனைக் கண்டித்து டெல்லி சட்டசபையில் இன்று கேஜ்ரிவால் ஆவேசமாக பேசினார்.

"எங்கள் தலை மீது அமர்வீர்களா?
கேஜ்ரிவால் பேசுகையில், "எனக்கு தெரியாமல் தான் கேட்கிறேன். யார் இந்த துணைநிலை ஆளுநர். ஆளுநர் என்றால் தலை மீது அமர்வீர்களா? நமது குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? இவர்கள்தான் நமது குழந்தைகளை படிக்கவிடாமல் செய்கிறார்கள். துணைநிலை ஆளுநருக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. அவ்வளவு ஏன்.. நமது துணைநிலை ஆளுநருடன் இணைந்து நாமே மத்தியில் ஆட்சியமைக்கும் சூழல் நாளை ஏற்படலாம். அப்படி அமைந்தால், எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது.

"மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் நான்"
நான் துணைநிலை ஆளுநரை அண்மையில் சந்தித்தேன். அப்பொழுது, எந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் எனக் கூறுவதற்கு நீங்கள் யார் என அவரிடம் கேட்டேன். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றேன். அவரோ, குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்றார். அதற்கு நான், "எப்படி வைஸ்ராய்களை பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்தார்களே அப்படியா?" என்றேன். வைர்ஸராய்கள்தான் அடிக்கடி, "இந்தியர்களே உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை" எனக் கூறுவார்கள். அதுபோலவே, நீங்களும் எங்களை பார்த்து கூறுகிறீர்கள். துணைநிலை ஆளுநருக்கு அரசின் திட்டங்களை தடுக்க எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் பல முறை தெளிவுப்படுத்திவிட்டது. ஆனாலும், தனது வரம்பை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்" என கேஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications