வினேஷ் போகத் விவகாரம்.. மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை! இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு
டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு கேள்வியை எழுப்பியிருந்தனர். கேள்விக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலளித்திருந்த நிலையில், இதனை ஏற்காமல் இந்தியா கூட்டணிக்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் அவர் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
"வினேஷ் போகத் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடியாதோ அவர்கள்தான் சதி செய்திருப்பார்கள்" என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில்,
"இதுவரை நடந்த போட்டிகளில் வினேஷின் வெற்றி மிகவும் வியக்கத்தக்கவகையில் இருந்தது. தைரியத்தை வெளிப்படுத்திய அவர், அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். அவரின் தகுதி நீக்கம் எனக்கு வேதனையளிக்கிறது. அவரின் அனைத்து முயற்சிகளும், உழைப்பும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போனதுதான் எனக்கு வருத்தம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல "பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத் தகுதி நீக்க விவாகரத்தில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் ஒலிம்பிக்ஸை புறக்கணித்துவிட்டு ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் நாடு திரும்ப வேண்டும்" என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். வினேஷ் தகுதி நீக்கத்திற்கு பயிற்சியாளர்கள்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளித்துள்ளார்.
அதில், "வினேஷ் போகத்துக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. வினேஷின் எடை 150 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது பயிற்சிக்காக மத்திய அரசு ரூ.70.75 லட்சம் வழங்கியுள்ளது. தகுதி நீக்க விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத் தலைவரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தகுதி நீக்க விவகாரத்தில் அவருக்கு உதவ முடியுமா? என பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் கேட்டார்" என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த பதில் ஏற்புடையதாக இல்லை என்று கூறி, இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications