உங்க டேட்டாவுக்கு பாதுகாப்பு இல்லை.. தகவல் கசிவில் உலகிலேயே இந்தியாவுக்கு 5வது இடம்
டெல்லி: உலகம் முழுவதும் ஆன்லைன் கணக்குகளிலிருந்து தகவல்கள் கசிவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், அதிக அளவு தகவல்கள் கசியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் பெரும் வரமாக இருந்தாலும், அதை தங்களது வாழ்க்கையின் அங்கமாக மாற்றியுள்ளவர்கள் பாதுகாப்பாகவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டியதும் அவசியம் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் தகவல் கசிவுதான்.

ஆன்லைனில் ஆதார் தொடங்கி, இறப்பு சான்றிதழ் வரை தற்போது திருத்தவும், பதிவிறக்கவும் முடிகிறது. அதற்கு ஆன்லைன் கணக்குகள் அவசியமாகும். ஆனால் இந்த கணக்குகளை பாதுகாப்பாக பராமரிக்கின்றோமா என்று கேட்டால், இல்லை என்றே பதில் கிடைக்கிறது. இப்படியாக பாதுகாப்பில்லாத ஆன்லைன் அக்கவுண்ட்களிலிருந்து ஏராளமான தகவல்கள் கசிந்திருக்கின்றன.
உலக அளவில் அதிக அளவு தகவல் கசிவு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் சுமார், 29.98 கோடி ஆன்லைன் கணக்குகளின் தகவல்கள் கடந்த 2023ம் ஆண்டு மட்டும் கசிந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸும், நான்காவது இடத்தில் ஸ்பெயினும் இருக்கின்றன. 5வதாக இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டில் நமது நாட்டில் 53 லட்சம் ஆன்லைகன் கணக்குகளிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
கடந்த 2022ம் ஆண்டை காட்டிலும் உலக அளவில், தகவல் கசிவு 18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இந்தியாவில் இது 56% ஆக குறைந்திருக்கிறது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு 1.23 கோடி அக்கவுண்ட்களிலிருந்து தகவல்கள் கசிந்திருந்தது. இதே 2023ம் ஆண்டு வெறும் 53 லட்சம்தான். தற்போதைய சூழலில் தகவல் கசிவை சிறப்பாக தடுக்கும் நாடாக ஐரோப்பா இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 16 கோடி அக்கவுண்ட்களின் தகவல்கள் கசிந்திருந்தன. இதே 2023ம் ஆண்டில் இது 11 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மிகச்சரியாக சொல்வதெனில் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேரின் தகவல்கள் இன்னமும் கசிந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று சர்ப்ஷார்க்கின் முன்னணி ஆராய்ச்சியாளர் அக்னெஸ்கா சப்லோவ்ஸ்காஜா கூறியுள்ளார். 'சர்ப்ஷார்க்' என்பது ஒரு இணைய பாதுகாப்பு நிறுவனமாகும். பொதுவெளியில் கிடைத்த சுமார் 29,000 டேட்டாபேஸ்களிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த தகவல் கசிவு விவகாரம் தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications