மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள்.. சர்வாதிகாரம் ஓங்குகிறதா..சாக்க்ஷி மாலிக்'நறுக்' கேள்வி
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திருப்பு விழாவின் போது அதன் வளாகத்தின் எதிரே மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? என மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் கேள்வியெழுப்பியுள்ளார்.
லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர்/வீராங்கனைகள் கடந்த ஜனவரியில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவையும் இவர்கள் விரும்பவில்லை. இப்படி இருக்கையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதாகவும், விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனையடுத்து வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மீண்டும் வீரர்கள்/வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த முறை அரசியல் கட்சிகள், விவசாயிகள் உள்ளிட்டோரின் ஆதரவுகளை கேட்டனர். மட்டுமல்லாது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்கள் இந்த புகாரை பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். இதனையடுத்து வீரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.
இதனையடுத்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று (மே.28) திறக்கப்பட்டது.
இதனையடுத்து, தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வளாகத்தில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து இவர்கள் மீது ஐபிசி பிரிவு 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தங்களுடைய எம்பியை பாஜக பாதுகாப்பதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? என மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய 7 மணி நேரத்தை கூட எடுத்துக்கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications