ராகுல் பின் காங்கிரஸ் கட்சி.. குலாம் நபி ஆசாத் விலகல் துரதிருஷ்டவசமானது .. ஜெய்ராம் ரமேஷ் வருத்தம்!
டெல்லி: ராகுல் காந்தியுடன் ஒட்டுமொத்த காங்கிரஸ் அமைப்பும் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அணிவகுக்கும் போது, குலாம் நபி ஆசாத் விலகியது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்குள் வந்த பின் கட்சியின் நிலை மாறியது. 2013ல் காங்கிரசின் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார் அதற்கு முன் காங்கிரசில் இருந்த முறைகள், வழக்கங்கள் அவரால் உடைக்கப்பட்டன.
காங்கிரசில் நிர்வாகிகள் கலந்தாலோசிக்கும் பழக்கத்தையே அவர் உடைத்துவிட்டார். ராகுல் காந்தி வருகையால் மூத்த தலைவர்கள் அவரின் வருகையால் ஓரம்கட்டப்பட்டனர் . அனுபவமில்லாத துதி பாடுவோர் கூட்டம் கட்சியை நடத்த தொடங்கியது.

ராகுல் மீது விமர்சனம்
ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின், சோனியா காந்தி இடைக்கால தலைவராக வந்தார். முன்பு காங்கிரஸ் ஆளும்போது இருந்த ரிமோட் கண்ட்ரோல் மோட் மீண்டும் கட்சிக்குள் அமலுக்கு வந்துள்ளது. சோனியா பெயருக்கு தலைவராக இருந்தாலும் எல்லா முடிவுகளும் ராகுல் காந்தி மூலமே எடுக்கப்பட்டு வந்தது. சமயங்கள் ராகுல் காந்தியின் பாதுகாவலர், பிஏ உள்ளிட்டோர் கூட முடிவுகளை எடுத்தனர் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காங்கிரஸ் கட்சி
இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தலைவரும் ராகுல் காந்தியுடன் பயணிக்க தயாராகும் போது குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது துரதிருஷ்டவசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் மக்கான்
அதேபோல் காங்கிரஸ் மூத்த அஜய் மக்கான் கூறுகையில், கட்சிக்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நாடு தழுவிய பிரச்சாரத்தில் குலாம் நபி ஆசாத் போன்ற ஒரு மூத்த தலைவர் பங்கேற்க விரும்பாதது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ்
இதேபோல் மற்றொரு காங்கிரஸ் முக்கிய தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், உள்ளிட்ட பிரச்னைகளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் அமைப்பும் பாஜகவை எதிர்த்து போராடும் போது, குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications