முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? ஹேபியஸ் கார்ப்பஸ் போடவா? கபில் சிபல் கேள்வி
டெல்லி: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியை திடீரென ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவின் 14 ஆவது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது பதவிகாலம் 2027 ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில், அவர் திடீரென பதவி விலகியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
கபில் சிபல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஜகதீப் தன்கர், நமது குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா செய்தார். இன்று, ஆகஸ்ட் 9 ஆம் தேதி. அவர் எங்கே? என்ற விவரம் அன்று முதல் இன்று வரை தெரியவில்லை.
அவர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்போது இல்லை. முன்னதாக அன்று, நான் அவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டபோது அவரது தனிச் செயலர் போன் அழைப்பை எடுத்து பேசினார். அப்போது, அவர் ஓய்வெடுப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது.
நான் 'லாப்பட்டா டேடீஸ்' பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் 'லாப்பட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி கேள்விப்பட்டதேயில்லை. இப்போது என்ன செய்வது? 'ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு தாக்கல் செய்யலாமா?
முன்னாள் துணை ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல உறவைக் கொண்டிருப்பவன் நான். அவரும் ஒரு வழக்கறிஞர். என்னுடன் பல வழக்குகளில் வாதிட்டவர். அப்படி இருக்கையில், அவரைக் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வது நல்லதொரு நகர்வாக அமையாது. அவரிடமிருந்தோ அல்லது அவர்தம் நண்பர்கள், குடும்பத்திடமிருந்தோ எந்தவொரு தகவலும் இல்லை. இது கவலை அளிக்கிறது.
அவர் எங்கே? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இதை அமித் ஷா தெரிந்துகொள்ள வேண்டும்! அதுபற்றி அறிக்கை வெளியிட வேண்டும். அவர் நமது முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஆயிற்றே. ஆகவே அவரைப் பற்றி நாடு கவலை கொண்டுள்ளது!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications