கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அடுத்த ‘குறி’??
கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி : டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் மேலவை உறுப்பினருமான கவிதா நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா கைது
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி 8 மணி நேரம் மணீஷ் சிசோடியாவிடம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் முதலில் 4-ஆம் தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிசோடியாவின் சிபிஐ காவல் 2-வது முறையாக 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சிறையில்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், சிசோடியாவிடம் விசாரணை நடத்த காவலை நீட்டிக்க சி.பி.ஐ. அமைப்பு கோரிக்கை எதனையும் வைக்காத சூழலில், சிசோடியாவுக்கு 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறை சம்மன்
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேசிஆர் மகள் கவிதா
சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படும் சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மிக்கு கவிதா லஞ்சம் கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய புள்ளி
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டதாக கூறப்படும் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமசந்திர பிள்ளையை கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கவிதாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கவிதாவிடம் மீண்டும் விசாரணை
இதேபோன்று, இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி சிபிஐ 7 பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. தொடர்ந்து கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்தது. இதன்படி, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்நிலையில், அமலாக்க துறை அவரை தற்போது நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications