வழக்குகள் தாமதத்தை தடுக்க.. கீழமை நீதிமன்றங்களில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் - சட்ட அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவின் நீதி அமைப்பு சாமானியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
கீழமை நீதிமன்றங்களில் முக்கியமான உள்கட்டமைப்பு மிக விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சரை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது இணை அமைச்சராக இருந்த (விளையாட்டுத் துறை தனிப்பொறுப்பு) கிரண் ரிஜிஜு (49 வயது) சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு நடைபெற்ற பாராட்டு பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.

கிரண் ரிஜிஜு பேட்டி
இந்த நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துப் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' எனக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் தான் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமானியன் அல்லது கிராமங்களில் இருந்து வருபவர் தனக்கான நீதியைத் தேடும்போது, அவர் தன்னிடம் உள்ள அனைத்து சொத்துகளையும் விற்க வேண்டி நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.

தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி
இதன் பின்னரும் ஒருவருக்கு நீதி தாமதமானால், அது நம்முன் மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. இங்கு ஒருவருக்கு 'தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி'. நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் சாமானியனுக்கே நாம் சரியான நீதி அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். நீதித்துறை என்பது பெரும்பாலும் ஒரு பணக்காரனின் தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலை மெல்ல மாறி வருகிறது. ஆனாலும், இப்போதும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் நீதிமன்றங்களை அணுக முடியவில்லை. போதிய நிதி மற்றும் கால தாமதம் ஆகியவை இவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

நீதிபதி ரமணா
நமது தலைமை நீதிபதி ரமணா எதைச் செய்ய வேண்டுமோ அதை மிகச் சரியாகச் செய்கிறார். நான் முதல் முறையாகத் தலைமை நீதிபதி ரமணாவை சந்தித்தபோது, அவர் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்கள் கூறியதையும் ஊடகங்களில் அவர் குறித்து வெளியான செய்திகளை வைத்த அவரை பற்றி ஊகித்திருந்தேன் ஆனால், அதையெல்லாம் தாண்டி உயர்ந்த நபர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவர் கட்டாயம் நீதித்துறைக்கு ஒரு புதிய விடியலைத் தேடித் தருவார்.

ஒரு நல்ல மனிதர்
இங்கு எனக்கு முன் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, நமது தலைமை நீதிபதி ஒரு நல்ல நீதிபதி மட்டுமில்லை ஒரு நல்ல மனிதரும் கூட எனக் கூறியிருந்தார். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கே நான் இப்போது கூடுதலாக எதாவது பேசினால், அது வேறுமாதிரியான ஆர்த்தப்படும்" என்று கூறி தலைமை நீதிபதி ரமணா குறித்த தனது பேச்சு முடித்துக் கொண்டார்,

கீழமை நீதிமன்றங்களில் மிகப் பெரிய மாற்றம்
தொடர்ந்து நீதித்துறை குறித்துப் பேசிய அமைச்சர் ரிஜிஜு, "சவால் மிகுந்த இந்த கொரோனா காலத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய நீதித்துறை மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பார் கவுன்சில் தலைவர் மிஸ்ரா வழக்கறிஞர்களின் பிரச்சினைகள் பற்றி எங்களுக்குத் தெரிவித்தார். அவர்களுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் உறுதியளிக்கிறேன். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கீழமை நீதிமன்றங்களில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு மறுசீரமைப்பதற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். கீழமை நீதிமன்றங்களில் முக்கியமான உள்கட்டமைப்பு மிக விரைவில் ஏற்படுத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications