சனாதனத்திற்கு எதிராக தமிழகத்தை மாத்திட்டாங்க என சாடிய BJP எம்பி! மக்களவையை முடக்கிய திமுக எம்பிக்கள்
டெல்லி: "ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிரான அடையாளமாக மாறிவிட்டது. அதன் அமைச்சர்கள் அதற்கு எதிராகப் பேசுகிறார்கள்" என மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறிது நேரம் மக்களவை முடங்கியது.
மக்களவையில் அனுராக், "மக்கள் கோயிலை அணுக நீதிமன்றம் நாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இந்துக்கள் தடியடிக்கு ஆளாகிறார்கள். ஏன் தடுக்கப்படுகிறார்கள்? தீபம் ஏற்றுவது குறித்த உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்தனர். தமிழக அரசு சனாதன விரோத நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது" என்று பேசியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த திமுக எம்பிக்கள், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும், பாஜக மதச்சார்பின்மையை கடைபிடிக்க மறுப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
இந்த உத்தரவுக்கு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில், உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஏற்றப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் திடீரென தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மறுபுறம் இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக, இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், மக்களவையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வரக் கோரி, 120 எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று அதை சபாநாயகர் ஓம் பிர்லா விடம் சமர்ப்பித்திருந்தனர். இதே போல மாநிலங்கள் அவையிலும் எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று, பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி எம்பிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இப்படியாக நாடாளுமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த விவாதம் மேல் எழுந்திருக்கக் கூடிய நிலையில், இன்று இது குறித்து பாஜக எம்பி அனுராக் தாகூர் பேசியிருந்தார். தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை, நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு திமுக எம் பி ராணி ஸ்ரீகுமார், "அமைதி பூங்காவான தமிழகத்தை, கலவர பூமியாக பாஜக முயற்சிக்கிறது" என்று விமர்சித்திருந்தார். இதனையடுத்து திமுக எம்பிக்கள் அனுராதாக்கூரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications