ஆர்வத்தை தூண்டும் 5ஆம் கட்ட தேர்தல்..வெற்றி கொடி நாட்டுவாரா ராகுல்..! இத்தனை ஸ்டார் வேட்பாளர்களா?
டெல்லி: 18வது மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். குறிப்பாக ஐந்து மத்திய அமைச்சர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஐந்து தொகுதிகளும் இந்த தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து 3 கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.

ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
மக்களவை தேர்தல்: ஏற்கனவே ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 20ஆம் தேதி 5ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் - பாஜக கட்சிகள் தயாராகி வருகின்றன.
பீகாரில் ஐந்து தொகுதிகள், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
5ஆம் கட்ட தேர்தல்: இதற்கான பிரச்சாரம் நேற்று நிறைவடைந்து நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. தேர்தலை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
உள்ளூர் காவல்துறை மட்டுமல்லாது மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினரும் இணைந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் நாளை காலை திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஸ்டார் வேட்பாளர்கள்: இந்த தேர்தலில் பல ஸ்டார் வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங், பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர் இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் களம் காண்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் யார்?: நாடே எதிர்பார்த்து இருக்கும் இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் உத்தர பிரதேசத்தில் முக்கிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலி, பாஜகவின் முக்கிய தேர்தல் ஆயுதமான அயோத்தி உள்ள பைசாபாத் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் நடைபெற்ற 14 தொகுதிகளில் 13 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது.
ராகுல்காந்தி: குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருத்தி இராணி ராகுல் காந்தியை தோற்கடித்தார். அந்த தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். குறிப்பாக 2019 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதிகளை கூட வெல்ல முடியவில்லை.
கடுமையான போட்டி: இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சி 12 இடங்களிலும் போட்டியிடுகிறது. ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருக்கும் தினேஷ் பிரகாஷ் சிங்குக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியாக இருக்கும் கேஎல் சர்மாவும் களமிறங்குகின்றனர்
அயோத்தி: இந்த தேர்தலில் முக்கிய ஆயுதமாக பாஜக பயன்படுத்தும் அயோத்தி ராமர் கோயில் அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் பாஜக களமிறங்குகிறது. 2019-ல் பாஜகவின் லல்லு சிங் வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து சமாஜ்வாடி இந்திய கம்யூனிஸ்ட் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்: இதேபோல் லக்னோ தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மோகன்லால் கன்ச் பகுதியில் மத்திய இணை அமைச்சர் கௌசல் கிஷோர், கோண்டாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்த்தன் சிங்க், கைசர்கஞ்ச் தொகுதியில் பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் உள்ளிட்டோரை பாஜக களம் இறக்கியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications