கைமாறிய அணுகுண்டு டிசைன்.. பாகிஸ்தான் பயணங்கள் வேற! டெல்லியை சுற்றி சுற்றி வந்த உளவாளி கைது
டெல்லி: இந்தியாவில் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து, அதை விற்பனை செய்த கும்பலை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அந்தக் கும்பலின் தலைவருக்கு அணுகுண்டு விஞ்ஞானிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் இந்தியாவின் ரகசியத் தகவல்களைக் கூட விற்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நமது நாட்டில் போலியாக பாஸ்போர்ட் செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அப்படித் தான் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை நடத்தி வந்த 59 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணை
அந்த நபருக்கு அணு குண்டு விஞ்ஞானிகள் உட்பட பல வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் என்றும் அவர் நாட்டின் தகவல்களைத் திருடும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
கைது செய்யப்பட்டவர் முகமது ஆதில் ஹுசைனி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சையத் ஆதில் ஹுசைன், நசிமுதீன் மற்றும் சையத் ஆதில் ஹுசைனி என அவருக்கு வேறு சில பெயர்களும் உள்ளதாம். பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்குச் சென்றுள்ள இவருக்குச் சில வெளிநாட்டு அணு விஞ்ஞானிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. ஹுசைனி நமது நாட்டின் முக்கியமான தகவல்களை வெளிநாடுகளுக்குத் திருடி விற்று இருக்கலாம் என போலீசார் சந்திக்கிறார்கள்.
போலி பாஸ்போர்ட்
ஹுசைனியிடம் இருந்து ஒரு ஒர்ஜினல் இந்திய பாஸ்போர்ட்டும், இரண்டு போலியான இந்திய பாஸ்போர்ட்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு முக்கிய பாதுகாப்புத் தளத்திற்குச் செல்லும் வகையில் மூன்று ஐடி கார்டுகளையும் அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இருந்து இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு தான் போலி அடையாள அட்டைகளும் பாஸ்போர்ட்டுகளும் தயாரிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைமாறிய அணு குண்டு டிசைன்
ஹுசைனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல முக்கிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார். ரஷ்ய விஞ்ஞானி ஒருவரிடம் இருந்து அணுசக்தி தொடர்பான டிசைன்களை வாங்கி, அதை ஈரானில் உள்ள மற்றொரு விஞ்ஞானிக்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக இந்திய டுட செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகப் பெரும் தொகையும் ஹுசைனி பெற்றுள்ளார். அப்படிப் பெற்ற தொகையின் ஒரு பகுதியை துபாயில் முதலீடு செய்த அவர், மீதமுள்ள சொத்துகளை ஆடம்பரமாகச் செலவழித்தது வந்திருக்கிறார்.
இது தொடர்பாகக் கூடுதல் காவல் ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில், "ஹுசைனியும் அவரது சகோதரர் அக்தர் ஹுசைனியும் ரகசியத் தகவல்களைத் திருடுவது, போலியான ஆவணங்கள் மூலம் பல பாஸ்போர்ட்டுகளைப் பெறுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கும்பல் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் பலரும் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
தொடரும் அதிரடி
இந்தச் சம்பவத்தில் அக்தர் ஹுசைனிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்த அக்தர் ஹுசைனியை மும்பை போலீசாரும் தனியாகத் தனியாகக் கைது செய்துள்ளனர்.. இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கஃபே உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு சிலரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கும்பல் மூலம் எத்தனை பேர் போலி பாஸ்போர்ட்டுகளை பெற்றனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆதில் ஹுசைனி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஹுசைனி மீது இப்போது சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications