மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
டெல்லி: சுவாச பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் சீதாராம் யெச்சூரி, இவர் கடந்த 1952ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். படிக்கும் காலத்திலேயே இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மாணவர் சங்கம் மூலம், இடதுசாரி தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

அவசர நிலை காலகட்டத்தின் போது ஜேன்என்யு பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக யெச்சூரி இருந்தார். எமெர்ஜென்சியை எதிர்த்து இவர் நடத்திய போராட்டங்கள் அக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றிருந்தது. இதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். வாழ்க்கையையே போராட்டங்களுக்காக இவர் அர்பணித்திருந்ததாக இடதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இவரது மறைவு, இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யெச்சூரியின் மறைவுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி தனது x பக்கத்தில், "நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது x பக்கத்தில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர். சிறு வயதிலிருந்தே மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுத்தார். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செவ்வணக்கம், தோழர்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications