‛‛மிமிக்ரி’’.. ராகுல் வீடியோ எடுத்தது தான் பிரச்சனைக்கே காரணம்! கடுகடுத்த மம்தா பானர்ஜி.. பரபரப்பு
டெல்லி: ராஜ்யசபா தலைவரான ஜெகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்ததும், அதனை ராகுல் காந்தி வீடியோ எடுத்ததும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி முதல் முதலாக அதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வீடியோ எடுத்தது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என அவர் தெரிவித்து பரபரப்பை பற்றவைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்து கலர் புகை குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக 5க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் லோக்சபாவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை இரு சபைகளின் தலைவர்களும் ஏற்கவில்லை.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து லோக்சபா, ராஜ்யசபாவில் கோஷமிட்டனர். இதையடுத்து சபைக்கு இடையூறு செய்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் உள்பட இருசபைகளிலும் 141 எம்பிக்கள் அதிரடியாக அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்படி இவர்கள் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது.
இதையடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பதாகைகளை ஏந்தி போராட்டம் செய்தனர். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி இந்திய துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தன்கரை போல் மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். அதனை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பி சர்ச்சையானது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி திரெளபதி முர்முவும் கண்டித்தார். இத்தகைய செயல் முட்டாள்தனமானது என காட்டமான வார்த்தையை பயன்படுத்தி அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். இதுபற்றி ஜெகதீப் தன்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்தார்.
இந்நிலையில் தான் இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நடந்ததை இயல்பான சம்பவமாக எடுத்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி இதனை வீடியோ எடுக்காவிட்டால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகி இருக்காது. அதோடு இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் இதுபற்றி கேள்வி எழுப்பி இருக்க மாட்டீர்கள்" என்றார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் இந்த சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா? என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மம்தா பானர்ஜி, "நான் மேற்கு வங்க மாநிலம் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை" எனக்கூறிவிட்டு நழுவினார்.












Click it and Unblock the Notifications