மோடி எடுத்த துணிச்சல் முடிவு.. இல்லையென்றால் பெட்ரோல் விலை ரூ.20 உயர்ந்திருக்கும்! ஜெய்சங்கர் பரபர
டெல்லி: பிரதமர் மோடி உறுதியான முடிவை எடுக்காமல் போய் இருந்தால் பெட்ரோல் விலை 20 ரூபாய் வரை அதிகரித்து இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஜெய்சங்கர்: அதாவது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது இன்றைய காலத்தில் ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கிறது என்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியா சரியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தக் காலத்தில் உலகில் எங்கு என்ன நடந்தாலும் அது மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. உதாரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதில் பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் இருந்தது. இருப்பினும், நாங்கள் தெளிவாக இருந்தோம். ஒரு வேலை அந்த நேரத்தில் நாங்கள் தெளிவான முடிவை எடுக்கவில்லை என்றால் பெட்ரோல் விலை 20 ரூபாய் உயர்ந்திருக்கும்.. இந்திய மக்களை கருத்தில் கொண்டே வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்.
வேக்சின்: அதேபோல கொரோனா தடுப்பூசி விவகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேலை நாம் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யாமல் இறக்குமதி செய்திருந்தால்.. அதன் விலை மிக அதிகமாக இருந்து இருக்கும். பொதுமக்களால் தடுப்பூசியை வாங்கி இருக்கவே முடியாது. இப்படி தான் வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கிறது.
உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு போர், அரேபியக் கடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, சீன எல்லை பதற்றம், தென் சீனக் கடலில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தும் சாதாரண பொதுமக்களையும் பாதிக்கும். உலகில் இப்போது பயங்கரவாதம் அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறந்த தலைவர்: இப்படி உலகில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இத்தனை சவால்களுக்கு நடுவே இந்த இந்தியாவை யார் சிறப்பாக வழிநடத்துவார்கள் என்பது முக்கியம். மக்கள் யாரை நம்புகிறீர்கள்? இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்பதும் முக்கியம்.. இந்த சவாலை யார் சமாளிப்பார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது விரைவில் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் ஒரு வலிமையான பிரதமர் நமக்கு இருந்தால், விரைவாகப் பாதுகாப்பு கவன்சிலில் உறுப்பினராகிவிடலாம்.. இப்போது நாங்கள் அதைத் தான் செல்ல முயல்கிறோம்" என்றார்.
துணிச்சல் முடிவு: முன்னதாக கடந்த மாதம், செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியது மிகச் சரியான நிலைப்பாடு. மாஸ்கோவில் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா துணிச்சலான முடிவை எடுத்தது. பெட்ரோல் விலை குறைய அதுவே முக்கிய காரணமாக அமைந்தது" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்கச் சர்வதேச அளவில் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியர்களின் நலனில் முக்கியத்துவம் தர முடிவு எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்றார்.












Click it and Unblock the Notifications