"ஸ்டைலா.. கெத்தா.." மின்சார காராக கம்பேக் தரும் நானோ.. டாடா போட்டிருக்கும் பக்கா ஸ்கெட்ச்! அடிதூள்
டெல்லி: இந்தியாவில் டாடா நிறுவனம் மின்சார கார்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே மிக விரைவில் டாடா தனது குறைந்த விலை காரான நானோ காரின் மின்சார மாடலை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை சில மாதங்களாக இந்தியாவில் மாறவில்லை என்றாலும் கூட, நீண்ட கால நோக்கில் பார்த்தால் அவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்குப் பிறகு பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கு கீழ் குறைவது சந்தேகமே..
இது லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வணிக வாகனங்களை மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தையும் பாதிக்கத் தொடங்கி உள்ளது. கார் வைத்திருந்தாலும் சரி, பைக் வைத்திருந்தாலும் சரி எரிபொருளுக்காகவே கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.

மின்சார கார்கள்
இத்துடன் சேர்ந்த பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் பிரச்சினைகளும் பெட்ரோல், டீசல் பயன்பட்டால் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் ஸ்கூட்டர் பிரிவில் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக ஓரளவு குறைவான விலையில் மின்சார வாகனங்கள் வந்துவிட்டன. ஆனால், இந்திய கார் சந்தையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போதும் கூட பெரும்பாலான மின்சார கார்களின் விலை 12 லட்சத்திற்கு மேலாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மின்சார கார்கள் பக்கமே செல்ல யோசித்தனர். ஆனால், இந்த நிலை மெல்ல மாறி வருகிறது.

டாடா
டாடா நிறுவனம் மின்சார கார் செக்மென்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் சந்தையில் விட்ட இடத்தை, மின்சார கார் சந்தையில் பிடிக்க டாடா நிறுவனம் முயன்று வருகிறது. நெக்ஸான், நெக்ஸான் மேக்ஸ், டியாகோ, டைகார் என்று 4 மின்சார கார் மாடல்கள் இப்போது டாடாவிடம் உள்ளது. அதிலும் டியாகோ மின்சார கார் 10 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்துள்ளது டாடா. இவை டாடாவின் இடத்தை மின்சார கார் சந்தையில் அழுத்தமாகப் பதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதே மின்சார கார் சந்தையில் டாடாவின் கை தான் ஓங்கியுள்ளது. டாடா தான் நாட்டின் மிக பெரிய மின்சார கார் நிறுவனமாக உள்ளது.

ஆதிக்கம்
கடந்தாண்டு மட்டும் 19,500 மின்சார கார்களை டாடா விற்றுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பருக்குள் டாடா ஏற்கனவே 24,000 மின்சார வாகனங்களை விற்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணமே இந்தியாவில் வேறு எந்தவொரு கார் நிறுவனத்திடமும் டாடாவிடம் இருக்கும் அளவுக்கு இந்தளவுக்கு மின்சார கார்களில் ஆப்ஷன்கள் இல்லை. வரும் காலத்திலும் டாடாவின் மின்சார கார் சந்தை தொடர்ந்து வளரவே உள்ளது. இதன் மூலம் நீண்ட கால நோக்கில் இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளர் என்ற இடத்தை பிடிக்கவும் டாடாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

நானோ
சரி விஷயத்திற்கு வருவோம். உங்களில் பெரும்பாலானோருக்கு டாடா நானோ கார் நினைவில் இருக்கலாம். ரத்தன் டாடாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான டாடா நானோ கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான போது இந்த நானாவின் விலை வெறும் ஒரு லட்சம் மட்டுமே. உலகளவில் மிகக் குறைந்த விலை கார்களில் ஒன்றாக இது இருந்தது. இந்த காரில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் எளிதாகப் பயணிக்கலாம். இருந்த போதிலும், ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் மிகப் பெரிய தோல்வியில் முடிந்தது. டாடா நானோவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

நானோ எலக்டிரிக்
பின்னர் மிகக் குறைந்த அளவில் நானோ உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. பிஎஸ் 6 வாகன விதிமுறைகள் கடந்த 2020இல் அறிமுகமான நிலையில், அத்தோடு நானோ உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. டாடா மோட்டர்சுக்கு நானோ மிகப் பெரிய தோல்வியாகவை அமைந்தது. இருப்பினும், தோல்வியில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு கம்பேக் கொடுப்பது தான் டாடாவின் வழக்கம். அதன்படி மீண்டும் நானோ காரை டாடா அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை மின்சார வாகனமாக வருகிறது நானோ. கடந்த சில நாட்களாகவே இந்த தகவல் தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அட்டகாசமாக வரும் டாடா
டாடா தரப்பில் இருந்து இதற்கு எவ்வித பதிலும் இல்லை. வரும் காலத்தில் வெளிவரும் திட்டங்கள் குறித்த டாடா முன்கூட்டியே எந்த தகவலையும் கூறாது என்று ஒற்றை வரியில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. டாடா நானோ சரியான வசதிகளுடன் பக்காவான விலையில் வெளியானால், நிச்சயம் அது இந்திய மின்சார கார் சந்தையையே புரட்டிப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், நானோ முதலில் வெளியான போது இருந்த குறைகள் பலவற்றை மின்சார மாடலில் டாடா நிச்சயம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நானோவை மக்களுக்கு அருகே எடுத்துச் செல்ல உதவும்,

எதற்குச் சரியாக இருக்கும்
டாடா நானோ நிச்சயம் தொலைதூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது. நகரத்திற்குள் தினசரி பயன்பாட்டிற்கே நானோ சரியானதாக இருக்கும். இந்திய நகரங்களில் காற்று மாசு பல மடங்கு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மிட்டில் கிளாஸ் மக்களுக்கு நானா சரியான ஒரு மாற்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. டாடா நானோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தாண்டு தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு படைக்குமா டாடா
ஏற்கனவே டாடா சமீபத்தில் அறிவித்த டியாகோ மின்சார காருக்கு மக்கள் மிகப் பெரியளவில் வரவேற்பு கொடுத்திருந்தனர். முதல் நாளே ஆயிரக்கணக்கில் புக்கிங் ஆனது. இதுவே டாடா நானோவுக்கும் தொடர்ந்தால் அது மிகப் பெரிய சகாப்தத்தைப் படைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இது இந்திய மின்சார கார்கள் சந்தையில் டாடாவுக்கு அசைக்க முடியாத இடத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications