ஹாட்ரிக் வெற்றி.. ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் மோடிக்கு அழைப்பு! ஞாயிறு இரவு பதவியேற்கிறார்
டெல்லி: ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நரேந்திர மோடி ஞாயிறு மாலை பிரதமரா பதவியேற்கிறார்.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும்.
எனவே தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக அரவணைத்து செல்கிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் என்டிஏ கூட்டணியின் தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இன்று மதியம் குடியரசுத் தலைவரை சந்தித்த மோடி, என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எம்பிக்களின் பட்டியலை கொடுத்து, ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரினார். இந்நிலையில் ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே வரும் ஞாயிறன்று மாலை நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய மோடி, "தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் நான் பிசியாக இருந்தேன். பின்னர் எனக்கு தொலைப்பேசி அழைப்புகள் வர தொடங்கின. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்கிற தகவலும் வந்தது. இது ஒரு விஷயத்தை உணர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் மற்றும் ஈவிஎம் இயந்திரம் குறித்து எழுப்பப்பட்டிருந்த விமர்சனங்கள் இந்த முடிவுகள் மூலம் அமைதியடைந்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைதி காக்கப்பட்டதுதான் இந்திய ஜனநாயகத்தின் சக்தி. அடுத்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நல்லாட்சி, வளர்ச்சி, சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது" என்று கூறியுள்ளார்.
மோடி மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, பாஜக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications