மீண்டும் பிரச்சினையை கிளப்பும் நவ்ஜோத் சிங் சித்து? பஞ்சாப் முதல்வர் பதவி குறித்து சர்ச்சை கருத்து
டெல்லி: பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், முதல்வர் பதவி குறித்து நவ்ஜோத் சிங் சித்து தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அதைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பஞ்சாபில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்தபாடில்லை.

பஞ்சாப் தேர்தல்
கடந்த 4 ஆண்டுகளாகப் பஞ்சாபில் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரிந்தர் சிங் முதல்வராக இருந்தார். அமரிந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் உச்சமடையவே, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதல்வர் பதவி குறித்து நவ்ஜோத் சிங் சித்து தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைமை
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நவ்ஜோத் சிங் சித்துவிடம் முதல்வர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நவ்ஜோத் சித்து, "முதல்வர் யார் என்பதைப் பஞ்சாப் மக்கள் தான் முடிவு செய்வார்கள். முதல்வர் யார் என்பதைக் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என உங்களுக்கு யார் சொன்னது? தவறான கணிப்புகளைக் கொண்டிருக்க வேண்டாம். பஞ்சாப் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி எம்எல்ஏக்களை தேர்ந்தெடுப்பார்கள், யார் முதல்வர் என்பதை அவர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள்" என்றார்.

முதல்வர் வேட்பாளர் இல்லை
பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பஞ்சாப் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்பட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜாகர் அறிவித்திருந்தார். பொது நிகழ்வுகளில் காங். கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைக் கூறுவதை நவ்ஜோத் சிங் சித்து வழக்கமான ஒன்றாகவே வைத்துள்ளார்.

போட்டி எப்படி
மொத்தம் 117 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆட்சியைப் பிடிக்க 59 இடங்கள் தேவை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கடும் போட்டியை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கூட ஆம் ஆத்மி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாஜக அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இவை தவிரச் சிரோமணி அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தலில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications