துணை ஜனாதிபதி தேர்தல்.. பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்
டெல்லி: பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக இருக்கும் சூழலில், சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இருந்தனர்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாகப் பதவி விலகினார். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சி.பி. ராதாகிருஷ்ணன்
இதில் பாஜக சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு துணை ஜனாதிபதி தேர்தலுக்காகப் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே டெல்லியில் தான் இருந்து வருகிறார். நேற்றைய தினம் அவர் என்டிஏ கூட்டணிக் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்திருந்தார். இன்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த அவர், காலை 11.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்றச் செயலாளரிடம் வேட்புமனுவை அளித்தார். அப்போது பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உடன் இருந்தனர்.
நரேந்திர மோடி & ஜே பி நட்டா
விதிகளின்படி குறைந்தபட்சம் நான்கு செட் வேட்புமனுக்கள் கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு செட்டிலும் 20 பேர் முன்மொழிபவராகவும், 20 பேர் வழிமொழிபவராகவும் கையெழுத்திட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்மொழிபவர்களாகக் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துப் பிரதானக் கட்சிகளிலும் இருந்தும் எம்பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும்
நமது நாட்டில் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர். பாஜகவுக்கு லோக்சபாவில் 240 எம்.பி-க்களும், ரஜ்யசபாவில் 102 எம்.பிக்களும் உள்ளனர். அதேநேரம் பாஜகவின் என்டிஏ கூட்டணியின் மொத்த பலம் லோக்சபாவில் 293ஆகவும், ராஜ்யசபாவில் 128ஆகவும் உள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து என்டிஏ கூட்டணிக்கு மொத்த பலம் 421ஆக இருக்கிறது. ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த 11 எம்.பிகளையும் சேர்த்தால் ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கும் ஆதரவு 433ஆக உயரும்.
சுதர்சன் ரெட்டி
மறுபுறம், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவையில் 235 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் 77 எம்.பி-க்களும் உள்ளனர். அவர்களின் மொத்த பலம் 312. ஆம் ஆத்மியின் 11 எம்.பி-க்களின் ஆதரவுடன், அவர்களின் மொத்த பலம் 325 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக சுப்ரீம் கோர்ட் மாஜி நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். சுதர்சன் ரெட்டி நேற்று தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்றிரவு தான் டெல்லி சென்றிருந்தார். இன்று அவர் எதிர்க்கட்சி எம்பிக்களை சந்திக்கும் நிலையில், நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்












Click it and Unblock the Notifications