Vice Presidential elections: உயர் பதவியில் தமிழர்! துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபி ராதாகிருஷ்ணனுக்கு மொத்தமாக 452 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் கிடைத்திருக்கிறது.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டன.
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாகக் கூட்டத்தொடர் நடக்கும்போதே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகத் துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அரசியல் சார்பு இல்லாத ஆந்திராவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இதற்கிடையே காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரமதர் மோடி முதல் நபராக வாக்களித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களிக்கிறார்கள். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நாடாளுமன்றத்தில் உள்ள லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளின் எம்பிக்களும் இதில் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் என்டிஏ மற்றும் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்கும். அதேநேரம் இரு கூட்டணியிலும் இடம்பெறாத கட்சிகள் மூன்று கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் கூட்டணியில் இல்லை என்றாலும் பல சூழல்களில் பாஜகவுக்கே ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவளித்திருக்கிறார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த பிஆர்எஸ் கட்சி இந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல ஒடிசாவில் இருக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும் தேர்தலைப் புறக்கணிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோன்மணி அகாலித்தளம் கட்சியும் தேர்தலை புறக்கணித்தது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி மொத்தமாக 300 வாக்குகளை பெற்றுள்ளார். இதனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயர் பதவிக்கு சென்றுள்ளதாக தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications