நீட் வினாத்தாள் ரூ20 லட்சத்துக்கு விற்பனை-மும்பையில் ஆள் மாறாட்டம்- 50 பேர் கைது- பிரியங்கா ஆவேசம்!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை ரூ20 லட்சத்துக்கு விற்பனை செய்தது; நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது; நீட் வினாத்தாளை கசியவிட்டது என நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் பாடத்திட்டங்களின் கீழ் படித்த, படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பை எதிர்கொள்வதற்கு பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. மருத்துவ படிப்பு எனும் கனவையே தொலைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனால் நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

இத்தனை துயரங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில்தான் எத்தனை எத்தனையோ முறைகேடுகள்- மோசடிகள் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. தற்போது வரை ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் என செய்திகள் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.
நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பீகாரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; ராஜஸ்தானில் ரூ20 லட்சத்துக்கு நீட் வினாத்தாளை கசிய விட்டு தேர்வு எழுத வைத்திருக்கின்றனர்; மும்பையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டமே செய்திருக்கின்றனர். இப்படியான நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இதுவரை 50 பேர் மொத்தம் பிடிபட்டுள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் முறைகேடுகள் தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது: மீண்டும், நீட் தேர்வுத் தாள் கசிவு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் 24 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் மீண்டும் குழப்பமடைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக கோடிக்கணக்கான நடந்து வரும் இந்த மோசடிப் போக்கு இன்னும் நிற்கவில்லை. இது குறித்து நாட்டின் பிரதமர் ஏதாவது கூறுவாரா? இளைஞர்களை அமைதிப்படுத்தும் வகையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. எங்கே அந்த சட்டம்? அதை ஏன் செயல்படுத்தவில்லை? அதனால்தான் வேலையில்லாத் திண்டாட்டம், வேலையில் ஊழலும் இந்தத் தேர்தலின் மிகப் பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. வினாத்தாள் கசிவுகள் தடுக்கப் படும் என்பது நமது நியாய பத்ராவின் தீர்மானம். இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பது நிறுத்தப்படும், அதை செய்து காட்டுவோம். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications