கிளம்பிய சர்ச்சை! புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்த நாளில் திறப்பதா? பாயும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றம் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. சாவர்க்கர் பிறந்த நாளான அன்று புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்றம் போதிய வசதிகளுடன் இல்லை என்பதால் புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் டாடா நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் 64ஆயிரத்து 500 சதுர அடி அளவில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்திலும் கூட பணிகள் தொய்வு இல்லாமல் முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது பணிகள் முடிந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு வழங்கி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், புதிய பாராளுமன்றம் திறக்கும் தேதி விவகாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏனெனில் வரும் 28 ஆம் தேதி சவர்க்கரின் பிறந்த நாளாகும். இதற்கு தான் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
போதாக்குறைக்கு பாரதிய ஜனதாவின் அமித் மால்வியா தனது ட்விட்டரில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்கிறார். அன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள். இந்தியாவின் மகத்தான மகன்' என குறிப்பிட்டு இருந்தார். இதனால், சாவர்க்கரின் பிறந்த நாளன்று புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "சாவர்க்கரின் பிறந்த நாளில் நாடாளுமன்றத்தை திறப்பது இந்த தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம். காந்தி, நேரு, படேல், சுபாஸ் சந்திர போஸ் போன்ற தலைவர்களை நிராகரிப்பதற்கு சமம்" என்று கூறியிருந்தார்.

ஐதராபத் எம்.பி ஓவைசி கூறுகையில், "பிரதமர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர்தான், அரசியல் சட்டத்துக்கு கிடையாது. .மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை அவைத்தலைவர் மூலம் புதிய நாடாளுமன்றத்தை திறக்கலாம். மக்களின் பணத்தில் நாடாளுமன்றம் கட்டப்பட்டு இருக்கிறது. தனது நண்பர்கள் தங்கள் சொந்த பணத்தை வழங்கி கட்டியதுபோல பிரதமர் நடந்து கொள்வது ஏன்?'என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுகேந்து சேகர் ராய் கூறுகையில், 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட 75-வது ஆண்டு அனுசரிக்கப்படும் வரும் நவம்பர் 23-ந்தேதி நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது சிறப்பானதாக இருக்கும். ஆனால் வரும் 28-ந்தேதி, சாவர்க்கரின் பிறந்த நாளில் திறக்கப்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications