70% வரை விலையை குறைத்தும் பயனில்லை.. ஏர் இந்தியா புக்கிங் கடும் சரிவு! தயங்கும் பொதுமக்கள்
டெல்லி: கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விபத்து இந்திய ஏவிஷேயன் துறைக்கு மிகப் பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம். இந்தியாவில் விமானச் சேவை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் புக்கிங் 30-35% வரை சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்கள் என்பது இன்னுமே இந்தியாவில் வளர்ந்து வரும் போக்குவரத்துத் துறைகளில் ஒன்றாகும். மேலும், விமான பயணங்களில் சென்டிமென்ட் ரொம்பவே முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே ஒரு விமான விபத்து கூட ஒரு ஏர்லைனுக்கு மிக பெரிய பின்னடைவைத் தரலாம். ஏர் இந்தியாவிலும் கூட இப்போது கிட்டதட்ட அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.

விமான விபத்து
கடந்த ஜூன் 12ம் தேதி பிற்பகல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். விமானம் ஒரு கல்லூரி விடுதியில் மோதியது. அதில் அங்கிருந்த 39 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு வெளியான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பலரும் விமானங்களில் பயணிக்க வேண்டுமா என்ற அளவுக்கு யோசிக்க ஆரம்பித்தனர். ஏர் இந்தியா மட்டுமல்ல, போயிங் நிறுவனத்தையும் பயனர்கள் விமர்சித்தனர். போயிங் விமானங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கி வந்துள்ள நிலையில், அதுவும் சர்ச்சையில் சிக்கியது.
35% வரை சரிவு
இதையடுத்து பலர் தங்கள் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யத் தொடங்கினர். விபத்துக்குப் பிறகு ஆறு நாட்களில் ஏர் இந்தியாவுக்கான விமான புக்கிங் 30-35% வரை குறைந்துள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "புக்கிங் 30-35% குறைந்துள்ளது. சர்வதேச புக்கிங் குறைய இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. விபத்தும் கூட அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது" என்றார்.
விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது சர்வதேச விமான டிக்கெட்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. டெல்லி பாரீஸ் விமான டிக்கெட் ஏர் பிரான்ஸில் ரூ.70,000 முதல் ரூ.83,000 வரை இருக்கிறது. ஆனால், ஏர் இந்தியாவில் ரூ.23,700ஆகவே இருக்கிறது. டெல்லி ஹாங்காங் விமான டிக்கெட் விலை வெறும் ரூ.11,912ஆக இருக்கிறது. இதுபோல பல ரூட்களிலும் விமான டிக்கெட் ரேட்டை குறைத்துள்ளது.
சிக்கல்
ஆனாலும், ஏர் இந்தியா விமான டிக்கெட்கள் குறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. கடந்த ஜூன் 12ம் தேதி முதல் ஏர் இந்தியா முன்பதிவுகளில் 20%க்கும் அதிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா மட்டுமின்றி மொத்தமாகப் பார்த்தாலும் கூட விமான புக்கிங் குறைந்தே வருகிறது.
அடுத்து என்னவாகும்?
அதேநேரம் கடந்த காலங்களில் நடந்ததைப் பார்த்தால் இது இயல்பானது தான் என்கிறார்கள் வல்லுநர்கள்! பொதுவாகவே ஒரு விபத்து நடந்தால் மக்கள் பயணிக்க அச்சப்படுவார்கள். இதனால் விமான டிக்கெட் புக்கிங் குறையவே செய்யும். அதேநேரம் அது சில காலம் மட்டுமே நீடிக்கும் என்றும் மீண்டும் புக்கிங் நார்மலாகிவிடும் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், விமான பயணங்கள் குறித்து நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதும் கூட சாலை, ரயில் பயணங்களைக் காட்டிலும் மிக மிகப் பாதுகாப்பான சேவையாக விமானங்களே உள்ளன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்!












Click it and Unblock the Notifications