கொரோனா புகுந்து ஒரு வருஷமாச்சு... கட்டுப்படுத்திய இந்தியா... கோட்டை விட்ட உலக வல்லரசுகள்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. அப்போது முதலே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வேகமாகப் பரவியது. இதனால் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளும் திணறின. உலக வல்லரசுகளாக அறியப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால்கூட கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஒரு புறம் அதிகரிக்கும் உயிரிழப்பு, மறுபுறம் பொருளாதார பாதிப்பு என வல்லரசு நாடுகளையே கொரோனா புரட்டிப் போட்டது.

முதல் கொரோனா நோயாளி
பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா கடந்தாண்டு ஜனவரி மாதம் இதே நாளில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து, திரும்பிய மாணவருக்குக் கேரளாவில் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 15 நாள் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர், அவர் குணமடைந்தார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு
ஆனால், அதன் பின்னர் கொரோனா பரவல் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்தது. வைரஸ் பரவ தொடங்கிய சில மாதங்களுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த மாநிலமாகக் கேரளா இருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா டீச்சர் ஆகியோரின் சிறப்பான செயல்பாடு காரணமாக விரைவிலேயே அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதும், இந்தியாவிலும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலில் மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் ஒரு நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் நீடிக்கப்படுகிறது. சில மாதங்கள் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு இருந்தது. அதன் பின்னரே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே இந்தியாவில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதே கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவியதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு
ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. செப்டம்பர் மாதம் முதல் 14 நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல 16, 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பின், கொரோனாவால் அதிக மக்களை இழந்த நாடாக இந்தியா இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியாவை மெக்சிகோ ஓவர்டேக் செய்தது.

நிலைமை கட்டுக்குள் வந்தது
அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் நிலைமை மெல்லக் கட்டுக்குள் வந்தது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிடக் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த டிசம்பர் மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்தது. அதேபோல கடந்த ஏழு நாட்களாக கொரோனாவால் சராசரியாக 140க்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களில் இதுவே குறைவாகும். இந்தியாவில் தற்போது 1.07 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 1.54 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சில மாதங்களுக்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு குறைந்ததும், கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாலும் உருமாறிய கொரோனா பரவலினாலும் அங்கு கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டது. இதேபோல, இந்தியாவிலும் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என்று சிலர் எச்சரித்தனர். இருப்பினும், ஏற்கனவே நாட்டிலுள்ள சில பகுதிகளில் ஹெர்ட் இம்மியூனிட்டி எனப்படும் சமூக தடுப்பாற்றல் வந்துவிட்டதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டதாலும் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications